சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை.!
நாட்டினுள் குற்றச்செயல்களில் ஈடுபட்டுச் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள, சர்வதேசப் பொலிஸாரால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 112 சந்தேகநபர்கள் 13 நாடுகளில் தங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்து நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.
முழு நாடும் ஒன்றாக எனும் தேசிய செயற்மதிட்டம் தொடர்பில், அத்திட்டத்தின் பிரதான அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி, பொதுப்பாதுகாப்பு அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் நேரடி மேற்பார்வையின் கீழ், இந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்த சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 68 சந்தேகநபர்களை நாட்டுக்கு கொண்டுவர முடிந்துள்ளது.
அத்தோடு தற்போது 13 நாடுகளில் தலைமறைவாகியுள்ள சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 112 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை 2027 ஆம் ஆண்டிற்குள் கைது செய்து நாட்டுக்கு கொண்டு வருவதற்கான வேலைத்திட்டமும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, துபாயில் மூன்று பேரை படுகொலை செய்த பிரதான பெண் சந்தேகநபர் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுத்துவைப்பு உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
குற்றச்செயல்கள் மூலம் ஈட்டப்படும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய , 2024 ஆம் ஆண்டில் 1,490 மில்லியன் ரூபாய், 2025 ஆம் ஆண்டில் 1,549 மில்லியன் ரூபாய் மற்றும் 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலகட்டத்தில் 1,656 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம், காணி, வாகனங்கள் மற்றும் பணம் ஆகியவற்றை அரசுடமையாகுவதுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் 2,835 கிலோ ஹெரோயின், 3,550 கிலோ ஐஸ், 11,167 கிலோ கஞ்சா மற்றும் 297 கிலோ கொக்கைன் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட தேசிய செயற்திட்டத்தின் ஊடாக பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், குற்றச்செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 5,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 450 பேருக்கு எதிராக சட்டவிரோத சொத்துக் குவிப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.


