ஷிரான் பாஷிக்கிற்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் சிக்கினார்.!
பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் ஷிரான் பாஷிக்கிற்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடுப்புக்காவல் கட்டளையின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாஷிக்கிற்கு தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி கொடுப்பதற்காக 2 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரல்லை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரிடமிருந்து இந்த பணத்தை அவர் பெற்றதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து 25,000 ரூபா பணம் கண்டெடுக்கப்பட்டதுடன், எஞ்சிய பணத்தை அவர் தனது வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சந்தேகநபர் இலஞ்சமாக பெற்ற 195,000 ரூபா பணத்தை பொலிஸார் மீட்டுள்ளதுடன் மூன்று அலைபேசிகளும் வழக்கு சான்றப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட கொன்ஸ்டபிள் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்சவின் ஆலோசனையின் பேரில் அந்தப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.


