இறக்காமத்தில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் பரிதாபப் ப@லி!
அம்பாறை, இறக்காமம் 07 – நயினாகாடு பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சோகச் சம்பவத்தில் நிந்தவூர், கோவில் வீதி, 19ஆம் பிரிவைச் சேர்ந்த 38 வயதுடைய மீரா தஸ்லிம் என்பவரே உயிரிழந்தவராவார்.
உணவகம் ஒன்றில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவர், நேற்று இரவு பணியை முடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, வீதியில் திடீரென எதிரே வந்த காட்டு யானையைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுத் தப்பியோட முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நிலத்தில் இடறி விழுந்த அவரை, காட்டு யானை கொடூரமாக மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறாய்வு மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து இறக்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

