உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரசின் கடனுதவித் திட்டங்கள் உண்மையான தொழில் முயற்சியாளர்களைச் சென்றடைகிறதா? : சத்தியலிங்கம் எம்பி கேள்வி

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
69 பார்வைகள்

உண்மையான தொழில்முயற்சியாளர்களைச் சென்றடைகிறதா அரசின் கடனுதவித் திட்டங்கள் எனவும் வன்னி விவசாயிகள் மற்றும் சிறு தொழில்முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சத்தியலிங்கம் எம்பி தெரிவித்தார்.

பொதுத்தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழான தீர்மானம் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பிலான இன்றைய பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

கௌரவ சபாநாயகர் அவர்களே, இன்று சபையின் முன் வைக்கப்பட்டுள்ள பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழான தீர்மானம் மற்றும் அபிவிருத்தி நிதித் திணைக்களத்துடன் தொடர்புடைய குறைநிரப்பு மதிப்பீடு ஆகிய இரு விடயங்கள் குறித்தும் சில முக்கியமான கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இலங்கையின் நுண், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சித் துறையையும் விவசாயத் துறையையும் வலுப்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார மீட்சியில் – சிறு தொழில்கள், கிராமிய உற்பத்தியாளர்கள், விவசாயிகள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சந்தைகளுடன் தொடர்புடைய தொழில்முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

குறிப்பாக வன்னி மாவட்டங்களில், விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, சிறு வணிகம், உணவு பதப்படுத்தல் மற்றும் விவசாயப் பெறுமதிசேர் சங்கிலி ஆகியவை வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரங்களாக உள்ளன.

இத்துறைகளில் தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய தடைகளாக குறைந்த வட்டியுடனான கடன் கிடைக்காமை, கடனுக்கான போதிய பிணை வசதிகள் இல்லாமை, சந்தை வாய்ப்பு குறைவு, சேமிப்பு மற்றும் குளிரூட்டி பாதுக்கக்கூடிய வசதிகளின் பற்றாக்குறை, தொழில்நுட்ப அறிவு போதாமை, வணிகம் தொடர்பான போதிய அனுபவமின்மை என்பவையாகும்.

எனவே தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க இலகு கடன் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அதேவேளை கடந்த காலங்களில் இவ்வாறு வழங்கப்பட்ட அரச வாழ்வாதார உதவிகள் மற்றும் கடன் மூலம் கிடைக்கும் நிதி உற்பத்தித் திறனை உயர்த்தி, வருமானத்தை பெறுவதோடு வேலைவாய்ப்பை உருவாக்கி, கடனைத் திருப்பிச் செலுத்தும் பொருளாதார நிலைக்கு உதவிபெற்றோர் வந்துள்ளார்களா?
அவ்வாறான செயல்பாடுகளுக்கு இத்திட்டங்கள் ஆதரவளிக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டிய பொறுப்பு இச்சபைக்கு உள்ளது என எண்ணுகிறேன்.

கடனை பெற்று பண்ணை ஒன்றை அமைக்கும் விவசாயி அப்பண்ணையிலிருந்து வருமானத்தை பெறும்வரையான காலப்பகுதியில் அவருடைய அன்றாடத்தேவைகளை நிறைவுசெய்யும் தகுதி அவருக்குள்ளதா என்பதை ஆராயவேண்டாமா?
தனது பண்ணையில் உள்ள கால்நடைக்கு உணவு வழங்குவதா அல்லது தனது குடும்பத்திற்கான உணவை தேடுவதா என்ற நிலை வந்தால் குடும்பத்திற்கான உணவே முன்னிலைப்படுத்தப்பட்டு அந்த விலங்குகள் உணவாக்கப்படும்.
இதுவே யதார்த்தமாகும்.

எனவே நிதி உதவி உண்மையில் தகுதியான தொழில் முயற்சியாளர்களுக்கு கிடைக்கிறதா என்பதே இத்திட்டங்களின் வெற்றியை அளவிடும் முக்கியமான அளவுகோலாகும்.

11 தனியார் வங்கிகளுக்கு மேலதிகமாக ஐந்து அரச வங்கிகளும் தகுதியுள்ள தொழில்முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கும் நிறுவனங்களாக குறிப்பிடப்படுகிறது.

வங்கிகளின் பங்கேற்பு கிராமப்புற தொழில் முயற்சியாளர்களுக்கும் கடன் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்த உதவலாம்.

ஆனால் வங்கிகள் கடன் வழங்கும் போது நகர்ப்புற அல்லது அதிக பிணை வசதிகள் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்காமல், சிறிய மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள உண்மையான தொழில்முயற்சியாளர்களையும் சென்றடைய வேண்டும்.

எனவே, கௌரவ அமைச்சர் அவர்களே இந்த நிதி எவ்வாறான அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது? மாவட்ட வாரியான இலக்குகள் உள்ளனவா? பெண்கள் தலைமையிலான குடும்பங்கள், இளைஞர் தொழில் முயற்சியாளர்கள், போருக்குப் பிந்தைய வாழ்வாதாரத்தை மீளமைக்கும் குடும்பங்கள், சிறு விவசாயிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு ஏற்ற கடன் நிபந்தனைகள் அமைக்கப்பட்டுள்ளனவா?

அதேவேளை வங்கிக் கடனுக்குத் தேவையான பிணை வசதிகள் இல்லாதவர்களுக்கு மாற்று உத்தரவாத முறை உள்ளதா?

கடன் வழங்குவது மட்டும் போதாது. கடனுடன் தொழில்நுட்ப ஆலோசனை, கணக்கியல் மற்றும் வணிக முகாமைத்துவ பயிற்சி, சந்தைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தல், பொருட்களைச் சேமிக்கும் வசதிகள் மற்றும் விளைபொருட்களுக்கான பெறுமதிசேர் வசதிகள் ஆகியவையும் இணைக்கப்பட வேண்டும்.

மிக முக்கியமாக ஏற்கனவே வழங்கப்பட்ட நிதி எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது, எத்தனை தொழில்முயற்சியாளர்கள் பயனடைந்துள்ளனர், எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, கடன் திருப்பிச் செலுத்தல் நிலை என்ன? என்பதையும் அறிய வேண்டும்.

குறிப்பாக விவசாயிகளுக்கு அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பைக் குறைக்கவும், நியாயமான விலையைப் பெறவும், உற்பத்தியைச் சந்தைக்கு கொண்டு செல்லவும் திட்டங்கள் உதவ வேண்டும்.

உலகப்பொது மறையான திருக்குறளில் ஒரு குறளை கூறி எனது பேச்சை நிறைவு செய்கிறேன்.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.
அதாவது வருவாயை உருவாக்குதல், பொருளை ஈட்டுதல், ஈட்டிய வளத்தைப் பாதுகாத்தல், அதை முறையாகப் பகிர்ந்து செலவிடுதல் ஆகியவற்றில் திறமை உடையதே அரசு.
அரசின் வருவாயை வீணாக்காமல், ஊழலைத் தடுத்து, பொதுநிதியை மக்கள் நலத் திட்டங்களுக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஏழு மாகாணங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

நாட்டின் ஏழு மாகாணங்களில் கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மத்திய, சபரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும்…

84 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாபய ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குவது குறித்து பரிசீலனை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதுவரை சந்தேகநபராகப் பெயரிடப்படாத நிலையில், அவருக்கான வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரிய விடயம்…

73 0 0
இலங்கை செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள பிரதேசங்களுக்கு பலத்த மழை பெய்து வருவதால், அந்த நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம்…

83 0 0
இலங்கை செய்திகள்

பொலிஸ்மா அதிபருக்கு எதிராக வழக்கு

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராகத் வழக்கை தாக்கல் செய்வதற்கான ஆவணத்தை கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசருக்கு அனுப்பி…

87 0 0