வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விடுத்த கோரிக்கைக்கு, மாகாணத்தின் நிறைவேற்று அதிகாரிகளும் வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கத்தினரும் இணங்கினர்.
வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (19) புதன்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கடந்த திங்கட்கிழமை (17) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து, தற்போதைய நிலைமை மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்வைத்துள்ள கவலைகள் தொடர்பில் இக்கலந்துரையாடலில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில், அனைத்து தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடனும் புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் வலியுறுத்தினார்.
அதேவேளை, அரச சேவையில் பணியாற்றும் அனைத்து தரப்பினரின் கௌரவமும் தொழில்சார் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத் துவமும் கலந்துரையாடலில் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள விரும்பத்தகாத சூழ்நிலைகள் மீண்டும் தோன்றாத வகையில், பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அவற்றை உரிய கலந்துரையாடல் ஊடாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
‘இவ்வாறான விரும்பத்தகாத சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம் பெறாத வகையில் இருதரப்பினரும் உறுதியுடன் செயல்பட வேண்டும்’ என அவர் வலியுறுத்தியதுடன், இதை கலந்துரையாடலில் பங்கேற்ற இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.
மக்களின் நலனையும் மாகாணத்தின் அபிவிருத்தி முன்னேற்றத்தையும் முன்னிறுத்தி, கருத்து வேறுபாடுகளைத் தாண்டி ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் எனவும், இதற்காக அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
இதற்கு கலந்துரையாடலில் பங்கேற்ற அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல், கல்வி, உள்ளூராட்சி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஐந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.





