நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை தோல்வியடையும் – அமைச்சரவைப் பேச்சாளர் உறுதி!
நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கல்வி மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டபோது, கல்வி அமைச்சை வகிக்கும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரவும், அவர் பதவியிலிருந்து விலகவும் எதிர்க்கட்சிகள் முயன்றன. எனினும், அந்த முயற்சி இறுதி வரை வெற்றி பெறவில்லை.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சராக இருந்த குமார ஜயக்கொடிக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தனர்.
எனினும், அரசு எடுத்த தீர்மானத்தின்படி, சுயாதீனமான விசாரணைக்கு வழிவகுக்கும் வகையிலேயே அவர் அவராகவே பதவி விலகினாரே தவிர, எதிர்க்கட்சிகளின் பிரேரணையால் அரசுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
தற்போது நீதி அமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முந்தைய முயற்சிகளைப் போன்றதுதான். இதனால் அரசுக்கு எந்தவித தாக்கமும் ஏற்படப்போவதில்லை.” – என்றார்.