சவுதி அரேபியா மீது கடற்படை முற்றுகை – ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!
ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹவுத்திகள், சவுதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதிப்பதாக திங்களன்று (21) அறிவித்தனர்.
இந்த அறிவிப்பானது ஈரானுடனான போரில் அமெரிக்காவிற்கு எதிராக ஒரு புதிய முனையைத் திறப்பதோடு, வளைகுடாவிற்கு அப்பால் உள்ள உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தகத்திற்கான அச்சுறுத்தலையும் அதிகரித்துள்ளது.
அமெரிக்கப் படைகளுக்கு போரில் ஏற்பட்ட மிக மோசமான உயிரிழப்புக் காலங்களில் ஒன்றிற்குப் பின்னர் இந்த பதற்றம் அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை ஜோர்டானில் உள்ள ஒரு அமெரிக்கத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்ட இரண்டு அமெரிக்க வீரர்களை பென்டகன் திங்களன்று அடையாளம் கண்டது.
அதே நேரத்தில், போரில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட மூன்றாவது வீரருடையதாக இருக்கலாம் எனக் கருதப்படும் அடையாளம் தெரியாத எச்சங்களையும் தாங்கள் கண்டெடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், வடக்கு ஈராக்கில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரானிய ஒருவழித் தாக்குதல் ஆளில்லா விமானத்திலிருந்து வெடிக்காத வெடிபொருட்களைக் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிக்கச் செய்ததன் போது நான்காவது படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் ஹவுத்திகள் தங்கள் முற்றுகை நடவடிக்கையை அறிவித்ததைத் தொடர்ந்து, சவுதி தலைமையிலான கூட்டணி அதற்குப் பலப்பிரயோகம் மூலம் பதிலடி கொடுப்பதாக ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
அத்துடன், ஹார்முஸ் நீரிணை நடைமுறையில் மூடப்பட்ட பின்னர் சவுதி எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கான முக்கியப் பாதையாகத் திகழும் பாப்-எல்-மண்டேப் நீரிணை வழியாகச் செல்லும் தங்கள் கப்பல்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அக்கூட்டணி செயல்படுத்தத் தொடங்கியது.
கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட ஒரு பலவீனமான இடைக்கால ஒப்பந்தத்தை முற்றிலுமாகச் சிதைத்துவிட்ட, மோசமடைந்து வரும் தொடர் தாக்குதல்களை நிறுத்துவதற்காக, தெஹ்ரானும் வொஷிங்டனும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க விரும்புவதற்கான அறிகுறிகள் தென்பட்டபோதிலும், ஹவுத்திகள் தங்கள் அறிவிப்பை வெளியிட்டனர்.
இராஜதந்திரத் தொடர்புகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதைக் குறிக்கும் வகையில், மத்தியஸ்தர்கள் தெஹ்ரானிடம் முன்மொழிவுகளை சமர்ப்பித்ததாக ஈரானின் வெளியுறவு அமைச்சகம் கூறியது, ஆனால் அது குறித்த மேலதிக விவரங்களை அளிக்கவில்லை.
ஹவுத்தி அமைப்பின் அறிக்கையைத் தொடர்ந்து மசகு எண்ணெய் விலைகள் சிறிது நேரம் உயர்ந்தன; எனினும், இராஜதந்திர ரீதியிலான தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வர்த்தகர்கள் இருந்ததால், பின்னர் விலைகள் மீண்டும் சரிந்தன.
வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள கூடுதல் அபாயங்கள் காரணமாக, செங்கடல் வழியாகச் சரக்குகளைக் கொண்டு செல்வதற்கான காப்பீட்டுச் செலவு அதிகரித்தது.
அமெரிக்கா ஈரானிய மின்சார உள்கட்டமைப்பைத் தொடர்ந்து தாக்கினால், செங்கடலுக்கான பாப் அல்-மண்டேப் நுழைவாயிலை மூடுமாறு ஹவுத்திகளை ஈரான் வலியுறுத்தி வந்தது.
அந்த நீர்வழிப்பாதையை முழுமையாக மூடினால், சவுதியின் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதிகள் இப்பகுதியை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்படும் என்பதால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் 7% குறையும்.
இந்த இடையூறு, வளைகுடாப் போரினால் ஏற்கனவே உலகளாவிய விநியோகத்தில் 10% குறைக்கப்பட்ட எண்ணெய் வரத்து வெட்டுக்கு மேலும் வலு சேர்க்கும்.