உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தமிழர்களை பாதிக்கக் கூடிய மேலும் ஆபத்தான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
45 பார்வைகள்

“சட்டங்களை வைத்து – சட்டங்களில் உள்ள ஓட்டைகளை வைத்து – கூடுதலாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களை ஒடுக்கும் சம்பவங்களே அதிகம் காணப்படுகின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டம் போல் இந்தச் சட்டத் திருத்தங்களும் எமது மக்களை ஒடுக்கப் பாவிக்கப்படப் போகின்றனவா எனும் ஐயம் எழுகின்றது.”

இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன்.

நேற்று நாடாளுமன்றத்தில் பணம் தூய்தாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பை ஒடுக்குதல் தொடர்பான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அதன் போதே இரா.சாணக்கியன் இந்த விடயத்தை முன்வைத்தார்.

இந்தச் சட்ட மூலங்கள் நேற்று நாடாளுமன்றத்தில் உரிய பெரும்பான்மையுடன் இரண்டாம், மூன்றாம் வாசிப்பில் அங்கீகரிக்கப்பட்டு விட்டன. இனி சபாநாயகர் ஒப்பமிட்டவுடன் அவை நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சட்டங்கள் தொடர்பில் சாணக்கியன் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு:-

“முதலில் ஒரு விடயத்தை நான் மிகவும் தெளிவாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

கறுப்புப் பண சுத்திகரிப்பைத் தடுப்பதும், ஊழலுக்கு எதிரான சட்டங்களை பலப்படுத்துவதும், நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை முறையாக அறிக்கையிடுவதும் அவசியமானவை என்பதில் எங்களுக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அவ்வாறான அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கிறோம். உண்மையில், சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான வெளிப்படுத்தலை கட்டாயமாக்கும் சட்டங்கள் வருவதற்கு முன்பே, நாங்கள் எங்களுடைய சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விவரங்களை சுய விருப்பின் அடிப்படையில் மக்களுக்கு வெளிப்படுத்தியவர்கள். எனவே, வெளிப்படைத்தன்மைக்கும், ஊழல் ஒழிப்பிற்கும் எதிராக நாங்கள் ஒருபோதும் இருந்ததில்லை.
ஆனால், இந்த சட்டமூலங்களில் உள்ள சில பிரிவுகள் குறித்து மிகக் கடுமையான கவலைகளை இந்த சபையில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கின்றேன்.

இந்த நாட்டில் கடந்த காலங்களில் சட்டங்களின் பெயரில், குறிப்பாக சட்டங்களில் இருந்த ஓட்டைகள் மற்றும் வரையறையற்ற அதிகாரங்களை பயன்படுத்தி, அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள்தான். அதற்கான மிகப் பெரிய உதாரணம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ஆகும்.

அந்தச் சட்டம் எவ்வாறு ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களின் வாழ்க்கையை பாதித்ததோ, அதேபோன்று இந்த புதிய சட்டங்களும் எதிர்காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மக்களை ஒடுக்குவதற்கான கருவியாக மாறிவிடுமோ என்ற மிகப் பெரிய ஐயம் எங்களுக்கு எழுகிறது. குறிப்பாக, இந்த சட்டமூலத்தின் மூலம் பொலிஸாருக்கு வழங்கப்படுகின்ற அதிகாரங்கள் வரையறையற்றவையாக இருக்கின்றன.

இன்று இந்த நாட்டில் சுமார் 80 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியாற்றுகிறார்கள். அண்மையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூட, அந்த 80 ஆயிரம் பேரில் ஒவ்வொருவருக்கும் தாம் நற்சான்றிதழ் வழங்க முடியாது என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

அப்படியான சூழலில், எந்தவித நீதிமன்ற மேற்பார்வையும் இல்லாமல், இவ்வளவு பரந்த அதிகாரத்தை முழுமையாக பொலிஸாரிடம் ஒப்படைப்பது மிகவும் ஆபத்தான முன்னுதாரணமாக மாறும்.

இந்த சட்டமூலம் சட்டமாகினால், ஒரு நபரின் சொத்துக்களை முதல் கட்டமாக 14 நாட்களுக்கும், அதன் பின்னர் மேலும் 21 நாட்களுக்கும் முடக்குவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இதற்காக நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியம் கூட இல்லை.

இது மிகவும் ஆபத்தான ஏற்பாடாகும். ஒரு ஜனநாயக நாட்டில், ஒருவரின் அடிப்படை உரிமைகளையும், அவரது சொத்து உரிமையையும் பாதிக்கும் எந்த நடவடிக்கையும் நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் இருக்க வேண்டும். எனவே, இந்த அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்காமல், நீதிமன்றத்திற்கு வழங்குமாறே நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

ஏனெனில், இத்தகைய வரையறையற்ற அதிகாரங்கள் வழங்கப்படும் போது, அவை ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரசியல் பழிவாங்கல்களுக்கு வழிவகுக்கும் அபாயம் மிக அதிகமாக இருக்கும்.

கடந்த காலங்களில் நிகழ்நிலை காப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டபோதும், இதே நிலைப்பாட்டையே நாங்கள் எடுத்தோம்.

அப்போது புதிய ஆணைக்குழுவுக்கு அதிகாரங்களை வழங்காமல், நீதிமன்றத்துக்கே அந்த அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று இந்த சபையில் வலியுறுத்தினோம்.

அந்த நிலைப்பாட்டுக்கு தற்போதைய ஜனாதிபதியும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் அப்போது ஆதரவு தெரிவித்திருந்தார்கள். இன்று ஆட்சியில் இருப்பவர்கள், அப்போது தாங்கள் எடுத்த அதே நிலைப்பாட்டை மறந்துவிடக் கூடாது.

மேலும், நிதி கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலத்தின் 24ஆம் பிரிவின் கீழ் நியமிக்கப்படவுள்ள குழு குறித்து மேலும் ஒரு கடுமையான பிரச்சினை இருக்கின்றது. இந்தக் குழு நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டிய அவசியமே இல்லை. அது அமைச்சரவைக்கு மட்டும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, நிதி புலனாய்வு பிரிவுக்கும் மிகவும் பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் செயற்பாடுகள் தொடர்பாக நாடாளுமன்றத்திற்குக் கட்டாயமாக அறிக்கையிட வேண்டும் என்ற எந்த ஏற்பாடும் இந்த சட்டமூலத்தில் இடம்பெறவில்லை.

நாடாளுமன்ற மேற்பார்வை இல்லாத அதிகாரம் என்பது எந்த ஜனநாயக நாட்டுக்கும் நல்ல முன்னுதாரணம் அல்ல. வரையறையற்ற அதிகாரங்கள் வழங்கப்படும் இடங்களில், கறுப்புச் சந்தை முறைமைகள் உருவாகும் அபாயமும், ஊழல் அதிகரிக்கும் அபாயமும் தவிர்க்க முடியாதனவாக மாறிவிடும். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் ஏற்கனவே பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைகளால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இன்றும் எமது இளைஞர்கள் பலர் வாரந்தோறும் ரி.ஐ.டி. விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள்.

எமது கட்சியின் உறுப்பினர்கள் பலரும் தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். வெளிநாடுகளில் வாழும் தமது உறவினர்கள் சட்டபூர்வமாக பணம் அனுப்பினால்கூட, அதற்காக விசாரணைக்கு அழைக்கப்படும் சூழ்நிலை இன்னமும் காணப்படுகின்றது.

அப்படிப்பட்ட அனுபவங்களை கடந்த சமூகமாகிய நாங்கள், இந்த புதிய சட்டத்தின் கீழ் என்ன நடக்கப் போகிறது என்ற அச்சத்தில் இருப்பது இயல்பானதே. இந்த சட்டம் அமுலுக்கு வந்த பின்னர், பொலிஸாரின் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரின் சொத்துக்கள் மாதக்கணக்கில் முடக்கப்படலாம்.

அதற்காக நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியமில்லை என்ற நிலை உருவாகின்றது.

இது ஜனநாயகக் கொள்கைகளுக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரான ஓர் அபாயகரமான முன்னுதாரணமாக அமையக்கூடும்.

வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்கள் இன்னமும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்புகளுக்கும், இராணுவ மற்றும் பொலிஸ் கெடுபிடிகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள்.

எனவே, இந்த அதிகாரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால், அதன் மிகப்பெரிய தாக்கத்தை மீண்டும் அனுபவிக்க வேண்டியவர்கள் எமது மக்களாகவே இருப்பார்கள்.

இறுதியாக, தேசிய மக்கள் சக்தி அரசிடம் நான் ஒரு விடயத்தை நினைவூட்ட விரும்புகின்றேன்.

எந்த அரசும் நிரந்தரமாக ஆட்சியில் இருப்பதில்லை. இன்று நீங்கள் உருவாக்கும் இந்த சட்டங்கள், நாளை வேறு ஓர் அரசின் கைகளுக்குச் செல்லும். அந்த அரசு இந்த அதிகாரங்களை தவறாக பயன்படுத்தினால், அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டியது இந்த நாட்டின் சாதாரண மக்கள்தான்.

எனவே, சட்டங்களை உருவாக்கும் போது இன்றைய அரசை மட்டும் நினைத்து உருவாக்காமல், எதிர்காலத்தில் அந்த சட்டங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதையும் சிந்தித்துச் செயற்படுமாறு இந்த சபையின் ஊடாக நான் வலியுறுத்துகிறேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0