சிரித்துக் கொண்டே அழுகிறோம் – தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்.!
திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக கடும் அதிருப்தி நிலவி வரும் நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் “சிரித்துக் கொண்டே அழுகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
கூட்டணிக் கட்சிகள் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்த்திருந்தபோதிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடந்த தேர்தலை விட குறைவாக தலா 5 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
ம.தி.மு.க.க்கு கடந்த முறை வழங்கப்பட்ட 6 தொகுதிகள் இம்முறை 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒரு தொகுதியில் மட்டும் தனிச்சின்னத்தில் போட்டியிடவும், மீதமுள்ள 3 தொகுதிகளில் கூட்டணி சின்னத்தில் போட்டியிடவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், புதிதாக இணைந்ததேசிய முன்னேற்றத் திராவிட கழகம்க்கு 10 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் கருத்து தெரிவித்த ம.தி.மு.க. அவைத்தலைவர் அர்ஜுனராஜ், “எங்களின் தகுதிக்கு ஏற்ப தொகுதிகள் வழங்கப்படவில்லை” எனக் கூறியதுடன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
மேலும், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசுவிற்கு முன்பாக உறுதியளிக்கப்பட்டதாக கூறப்பட்ட தொகுதி வழங்கப்படாததால், அவர் கூட்டணியில் தொடர்வது குறித்து இறுதி முடிவை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.