சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவை!
சீனாவின் ‘ஏர் சீனா’ நிறுவனம், பீஜிங் நகரிலிருந்து டெல்லி நோக்கி நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட இந்தியா – சீனா உறவுகள், பின்னர் நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் படிப்படியாக சீரடைந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு விஜயம் செய்து, சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அப்போது, இரு நாடுகளும் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க ஒப்புக் கொண்டிருந்தன.
இந்த நிலையிலேயே ‘ஏர் சீனா’ நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது வெறும் விமான சேவை அல்லாது, இரு நாடுகளுக்கிடையிலான நம்பிக்கை, வர்த்தகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கான முக்கியமுன்னேற்றமாகக் கருதப்படுகின்றது என சீனத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தியாவின் ‘இண்டிகோ’ விமான நிறுவனம் சீனாவின் ஷாங்காய் நகரத்திற்கும் நேரடி சேவையை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்திய விமான சேவைகள் சில சீன நகரங்களுக்கு சேவைகளை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.