பாகிஸ்தான் முன்னாள் தூதரின் கருத்துக்கு இந்தியாவில் கடும் கண்டனம்.!
பாகிஸ்தானின் அணு சக்தி கட்டமைப்பை அமெரிக்கா தாக்கினால், மும்பை மற்றும் டெல்லி நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வேண்டியிருக்கும் என இந்தியாவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் தெரிவித்திருந்த கருத்துக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதற்கு பதிலளித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் துஹின் சின்ஹா, இந்தக் கருத்து பாகிஸ்தான் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலையை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், “மும்பை மற்றும் டெல்லி மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது பாகிஸ்தானின் அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றது. கடந்த காலங்களிலும் இத்தகைய கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்த அவர், அந்தநாட்டின் நிலைப்பாடுகள் பிராந்திய அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை எனவும் சுட்டிக்காட்டினார்.