ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் திகதி இன்று அறிவிப்பு.!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலுக்கான திகதியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (15) மாலை 4 மணிக்கு அறிவிக்க உள்ளது.தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமார் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு சென்று அரச அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைகள் நடத்தியிருந்தார்.ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக தேர்தல் திகதிகள் அறிவிக்கப்பட உள்ளன.
அதன்படி மேற்கு வங்கத்தில்ஐந்து முதல் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட மற்ற நான்கு மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் எனவும் வட்டாரங்கள் கூறுகின்றன.இதற்கிடையில், இந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலுடன் பல்வேறு மாநிலங்களில் வெற்றிடமாக உள்ள மக்களவை மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் அறிவிக்கப்பட உள்ளன.