போர்ப்பதற்றத்துக்கு இடையே துபாயிலிருந்து டெல்லி நோக்கி முதல் விமானம்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக தடைப்பட்டிருந்த விமான சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், துபாயிலிருந்து நேற்று முதல் விமானம் டெல்லி வந்து சேர்ந்தது.ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியாக, வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதால், பல விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன. இதனால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்தனர்.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து குறைந்த அளவிலான விமான சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அபுதாபியிலிருந்து புறப்பட்ட ஒரு விமானம் நேற்று காலை டெல்லிஇந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் நூற்று நாற்பத்தி ஒன்பது பயணிகள் பயணம் செய்தனர். மற்றொரு விமானம் அபுதாபியிலிருந்து புறப்பட்டு மும்பையில் தரையிறங்கியது.
டெல்லி விமான நிலையத்தில் வந்த பயணிகளை அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கட்டியணைத்து வரவேற்றனர். பலரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் காணப்பட்டது.தாயகம் திரும்பிய பயணி ஒருவர் கூறுகையில், வானில் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்படுவதை நேரில் காண முடிந்ததாகவும், அங்கு இன்னும் பதற்றமான நிலை தொடர்வதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், பயணிகள் மற்றும் குழுவினரை துபாயிலிருந்து மீண்டும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.