முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை.!
திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இடையிலான கூட்டணி தொடர்பான குழப்பம் நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் நேற்று (மார்ச் 3) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலினை சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இரு கட்சிகளுக்கிடையிலான கூட்டணியில் தொடர்ந்தும் இழுபறி நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களாக ஆட்சியில் பங்கு வழங்க வேண்டும், மேலும் அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தின.
மேலும், சில தலைவர்கள் மாற்றுக் கட்சிகளுடனும் தொடர்பு கொண்டு கலந்துரையாடியதாகக் கூறப்பட்டமை அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை உருவாக்கியது.கடந்த சில நாட்களாக திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் பல கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தபோதிலும், இறுதி முடிவு எட்டப்படாததால் கூட்டணியில் தெளிவின்மை நிலவி வந்தது.
காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தொடருமா அல்லது வேறு அணியுடன் இணையுமா என்ற கேள்வியும் எழுந்திருந்தது.இந்நிலையில் நடைபெற்ற கலந்துரையாடலில், திராவிட முன்னேற்றக் கழகம் 29 சட்டமன்றத் தொகுதிகளையும், இரண்டு மாநிலங்களவை இடங்களையும் வழங்க ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.