முதியோர், மாற்றுத் திறனாளி உதவித்தொகை பெறுவோருக்கு தமிழக அரசு ரூ.2,000 சிறப்பு நிதி வரவு.!
தமிழக அரசின் மாதாந்த ஓய்வூதிய உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கணவரை இழந்த பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மார்ச் மாத ஓய்வூதியத்துடன் இணைத்து தலா ரூ.2000 சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், சமூகத்தின் நலிவடைந்த தரப்பினருக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் சிறப்பு நிதி வரவு வைக்கப்பட்டுள்ளது.அதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் கணவரை இழந்த பெண்கள் உள்ளிட்டோருக்கு தலா ரூ.3200 வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.3500 வழங்கப்பட்டுள்ளதுடன், பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கு தலா ரூ.4000 வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மீனவர் குடும்பங்களுக்கு மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வழங்கப்பட்டு வருவதாகவும், நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளுக்கு ஆதார விலை நிதியாக ரூ.8.53 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் எவரையும் பின்தங்க விடமாட்டோம் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.