வருவாய்த் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம்: நெல் விற்க முடியாமல் விவசாயிகள் பாதிப்பு.!
வருவாய்த் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி. எஸ். மாசிலாமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடையாளச் சான்று கட்டாயம் எனவும், அந்தச் சான்று இருந்தாலேயே கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், வருவாய்த் துறை ஊழியர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த நான்கு நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், கிராம நிர்வாக அலுவலர்களும் பணியில் கலந்துகொள்ளாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேவையான சான்றிதழ்களைப் பெற முடியாமல் பல மாவட்டங்களில் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே அறுவடை செய்த நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் குவிந்துள்ளதால், அவற்றை பாதுகாக்க கூடுதல் செலவு ஏற்படுவதாகவும், மேலும் அறுவடை செய்ய வேண்டிய பயிர்களும் தாமதமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரிகளின் முன்கூட்டிய நடவடிக்கை இல்லாததால் விவசாயிகள் பெரும் அவதியடைந்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, சான்றிதழ் சிக்கல் இல்லாமல் நெல் கொள்முதல் தடையின்றி நடைபெற தேவையான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.