இந்தியாவில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு விசேட பயிற்சி.!
இந்தியா நாட்டின் ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள கலாநிதி எம்.சி.ஆர் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் வளாகத்தில், இலங்கை ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கான ஒரு வார கால விசேட ஊடக முகாமைத்துவப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
2026 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இரு தொகுதிகளாக நடைபெற்ற இந்தப் பயிற்சியில், இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 60 பேர் கலந்து கொண்டனர்.உலகளாவிய ஊடக சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப, அச்சு, இலத்திரனியல் மற்றும் எண்ணிம ஊடகத் துறைகளில் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.
இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நெறியில், ஊடகத் தொழில்நுட்ப வளர்ச்சி, செய்தியகம் மாற்றம், ஆளுகை தொடர்பாடல்மற்றும் அறநெறி சார்ந்த ஊடகவியல் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.செயற்கை நுண்ணறிவு, தரவு அடிப்படையிலான செய்தி அறிக்கையிடல், போலிச் செய்திகளை எதிர்கொள்ளுதல், நெருக்கடி கால தொடர்பாடல் மேலாண்மை போன்ற சமகால முக்கியத் தலைப்புகளில் நிபுணர்கள் பயிற்சி வழங்கினர்.
தத்துவார்த்த அறிவுடன் நடைமுறைத் திறன்களும் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.
பயிற்சியின் ஒரு பகுதியாக, சார்மினார் மற்றும் இந்தியாவின் முன்னணி புத்தாக்க மையமான டி-ஹப் ஆகிய இடங்களுக்கு களப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இப்பயணங்கள் இந்தியாவின் பண்பாட்டு பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்த புரிதலை அதிகரித்தன.
நரேந்திர மோடி அவர்கள் 2025 ஏப்ரல் மாதம் இலங்கைக்கு மேற்கொண்டவிஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட திறன் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சிகள் நடத்தப்பட்டன.இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் இலங்கையர்களுக்காக மேலதிகமாக 700 பயிற்சி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 1,000 இலங்கையர்கள் இந்தியாவின் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளால் பயனடைந்து வருகின்றனர்.