பாலி*யல் குற்றச்சாட்டு: அவிமுக்தேஷ்வரானந்த் மீது போக்ஸோ வழக்கு.!
உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோதிஷ்வர் மடத்தின் சங்கராச்சாரியாராக உள்ள சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் தொடர்பில் எழுந்துள்ள பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக, நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகரமேளா புனித நீராடல் நிகழ்வின் போது, அவரது ஆதரவாளர்களுக்கும் உத்தரப் பிரதேச காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் அவரது ஆதரவாளர் ஒருவர் காயமடைந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் அவர் வலியுறுத்தினார். பின்னர் தேவையான நடவடிக்கை எடுக்கப்படாததால், மகரமேளாவை புறக்கணித்து அங்கிருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அவரது முகாமில் தங்கியிருந்த மூன்று சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விவகாரம் தொடர்பாக ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி முக்தி நிர்மாண அறக்கட்டளையின் தலைவர் அசுதோஷ் பிரம்மச்சாரி என்பவர் போக்ஸோ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஜுசி காவல் நிலையத்தில் கடந்த வாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சங்கராச்சாரியாரின் உதவியாளர் முகுந்தானந்த பிரம்மச்சாரி மற்றும் பெயர் குறிப்பிடப்படாத மேலும் மூவர் சேர்க்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட சிறுவர்களிடம் மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையின் அடிப்படையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.இதனைத் தொடர்ந்து, அவிமுக்தேஷ்வரானந்த் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.