உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கிவுல் ஓயா திட்ட ஆவணங்களில் பாதிக்கப்படவுள்ள மக்கள் தொடர்பில் எதுவுமில்லை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள கிவுல் ஓயா திட்டத்திற்காக மொத்த மதிப்பீடாக 24000 மில்லியன் ரூபா காட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் 6000 விவசாயிகள் பயன்பெறவுள்ளனர். ஒரு விவசாயிக்கு ரூபா 4 மில்லியன் செலவு செய்யும் அளவுக்கு அவசரம் காட்டும் பின்னணி பற்றி அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் எடுத்துரைத்தார்.

கிவுல்ஓயா திட்டம் தொடர்பிலான விசேட கூட்டமொன்று விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்களின் தலைமையில் இன்று (17.02.2026) நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
1983ஆம் ஆண்டு தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்கள் அங்கு குடியேற்றப்பட்ட வரலாறும் அதனால் அந்த நிலத்திற்கு சொந்தமான தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் தொடர்சியாக இனப்பரம்பலை மாற்றும் நோக்கில் கடந்தகால பேரினவாத அரசாங்கங்களின் செயற்பாடு தொடர்பிலும் விரிவான தெளிவூட்டல் செய்யப்பட்டது.

மேலும் 1983ஆம் ஆண்டு தமிழ் மக்களை அவர்களது பூர்வீக நிலத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றிவிட்டு சிங்கள மக்களை அந்த நிலங்களில் குடியேற்றம் செய்யும்போது தமிழ் மக்கள் வாழ்ந்த கொக்கச்சியான்குளம்( போகஸ்வெவெ), கச்சல்சமளங்குளம் (சப்புமல்கஸ்கட), ஹெண்பாம் (கல்யானபுர), டொலர்பாம் (சம்பத்நுவர), சிலோன் தியேட்டர் (கஜபாபுர), அரியகுண்டான் (எத்தாவெட்டுனுவெவ), கொக்குத்தொடுவாய் வடக்கு ( ஜனகபுர), உந்தராயன்குளம் (நெலும்வெவெ), ஆமையன்குளம் (கிரிபென்வெவெ), வத்தாமடு(ஹெலம்பவெவ), கொக்குளாய்(கொகிலபுர), நாயாறு (மாயபுர), திரிவைச்சகுளம் ( அந்தரவெவ), நவாலயம் மற்றும் சுவாலயம்( மொனரவெவ) ஆகிய சுமார் 14இற்கும் மேற்பட்ட இடங்கள் தற்போது சிங்கள பெயர்கள் சூட்டப்பட்டதுடன் வெடிவைத்தகல்லு மற்றும் கள்ளிக்குளம் ஆகிய பாரம்பரிய தமிழ் கிராமங்களில் பல சிங்கள உப கிராமங்களும் உருவாக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். அமைச்சர் அவர்கள் மிக ஆர்வமாக அவற்றை கேட்டறிந்து கொண்டார்.

1983ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து குடியேற்றப்பட்ட மக்களின் நீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நீர் வழங்குவதில் எமக்கு எப் பிரச்சினையும் கிடையாது. ஆனால் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் தரப்பினராகிய தமிழ் மக்கள் தொடர்பிலும் அவர்களுக்கான நிவாரனங்கள் தொடர்பிலும் எந்தவிதமான ஆய்வுகளையும் செய்யாத மகாவலி அதிகாரசபை பயன்பெறும் தரப்பினருக்கான வரப்பிரசாதங்கள் பற்றியே திட்ட ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ் விவசாயிகளின் 910 ஏக்கர் வயல் நிலம், பிரதேச சபைக்கு சொந்தமான பாதைகள், குடியிருப்புக் காணிகள் நீரில் மூழ்கும் எனவும் பெருந்தொகையாக வனம் அழிக்கப்படுவதால் யானை-மனித முரண்பாடு அதிகரிப்பதுடன் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்தகால அரசுகள் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டிற்காக உருவாக்கிய அதே திட்ட வரைபினை இந்த அரசாங்கமும் எதுவித கலந்துரையாடலோ மீளாய்வோ இன்றி நடைமுறைப்படுத்த முயல்வது ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவிதமான நீர்த் தேவையுடன் மகாவலி எல் வலய பிரதேசத்திற்கு வெளியே வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த மிக அதிக எண்ணிக்கையான விவசாயிகள் உள்ளார்கள். அவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் திட்டமொன்றினைப் பற்றிய சிந்தனை ஆட்சியாளர்களுக்கு ஏன் வரவில்லை எனவும் கேள்வியெழுப்பினார்.

2002ஆம் ஆண்டில் அரச அதிபராக இருந்த திரு.கணேஸ் அவர்களின் காலப்பகுதியில் வவுனியா வடக்கில் பெரிய மருதோடைக்குளம், சிற்றாற்றுக்குளம், கல்லாற்றுக்குளம் ஆகிய மூன்று குளங்களையும் பிரதானமாகக் கொண்ட 13 சிறிய நீர்ப்பாசனக் குளங்களை உள்ளடக்கிய படிமுறை நீர்ப்பாசன தொகுதியொன்றை புனரமைப்பதனூடாக 2000 ஏக்கர் வயல் நிலத்தில் செய்கை மேற்கொள்ள நியாப் மற்றும் சிரான் ஆகிய நிறுவனங்களுக்கு முன்மொழிவு சமர்ப்பித்தார், ஆனால் இன்றுவரை அத்திட்டம் கைகூடவில்லை. மக்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்வதுதான் அரசாங்கத்தின் நோக்கம் என்றால் இந்த திட்டம் உட்பட பல இவ்வாறான திட்டங்களை அடையாளப்படுத்தி மக்கள் பயன்பெறும் வகையில் செயற்படுத்த உங்களுடன் சேர்ந்து செயற்பட நாம் தயாராகவே உள்ளோம் ஆனால் எமது ஒத்துழைப்பை பெறும் மனநிலை இதுவரை அரசாங்கத்திற்கு வராதது துரதிர்ஷ்டவசமானது எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் வன்னிப் பிரதேசத்தில் உள்ள வனவள திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட குளங்களையும், வயல்களையும் விடுவிப்பதுடன் அனைத்து குளங்களையும் புனரமைக்கும் போது பாரிய நீர்ப்பாசன திட்டங்கள் தேவையற்றது என்றும் காணியற்ற அனைவருக்கும் விவசாய காணிகளை வழங்க முடியும் எனவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார். அத்துடன் பாரிய நீர்ப்பாசன திட்டங்களை நடைமுறைப்படுத்தி வனத்தை அழிப்பதனூடாக நேரடியாகவும் மறைமுகமாகவும் மனித-யானை மோதல் அதிகரிப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கலந்துரையாடல்களை ஏற்படுத்தி தேவையான முன்மொழிவுகளை அனைவரதும் பங்குபற்றுதலுடன் தயாரிக்க தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

எனவே தொடர்ந்தும் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதை நிறுத்தி அனைத்து மக்களையும் சமனாக மதிக்கும் அரசாக இத்திட்டத்தினை மீளாய்வு செய்து தமிழ் மக்கள் பாதிப்படையாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதன்போது பதிலளித்த அமைச்சர், இத்திட்டம் முன்னைய அரசுகளால் இனவாத நோக்கங்களுக்காவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை ஆமோதித்ததுடன், இத்திட்டம் மீளாய்வு செய்தபின்னரே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார். அத்துடன் இத்திட்டம் தொடர்பான தமிழ் தரப்பினது கரிசனைகள், முன்மொழிவுகளை தனக்கு எழுத்து மூலமாக சமர்ப்பிக்கும்படி கோரினார்.

மேலும், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின்போது வனவள திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட இடங்களின்கீழ்வரும் குளங்கள், வயற்காணிகளை விடுவித்தல் தொடர்பில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதும் இதுவரை எவையும் விடுவிக்கப்படவில்லை என்பதையும் அமைச்சரின் கவனத்திற்கு இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டுவந்தார். எனினும் அவ்வாறான தீர்மானங்கள் எவையும் மாவட்ட செயலகங்களிலிருந்து தனக்கு அனுப்பிவைக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கிவுல் ஓயா திட்டம் மற்றும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய இடங்களில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள குளங்கள், வயல் நிலங்கள், அரச திணைக்களங்களால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைகள் உள்ளிட்ட ஏனைய விவசாய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டமொன்றை எமது பகுதிகளில் ஏற்பாடு செய்யுமாறு அமைச்சரிடம் இக் கூட்டத்தில் பங்குபற்றிய கெளரவ ரவிகரன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரினார்கள். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அவர்கள் விரைவாக அவ்வாறான கூட்டத்தை கூடுவதாக வாக்குறுதியளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

100 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

91 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

39 0 0