இம்ரான் கானுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும்: முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள் கோரிக்கை.!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அவர்களின் உடல்நிலை குறித்து அச்சம் நிலவி வரும் நிலையில், ஐந்து டெஸ்ட் அணிகளைச் சேர்ந்த பதினான்கு முன்னாள் சர்வதேச கிரிக்கெட் தலைவர்கள் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்குமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் கிரெக் சேப்பல் தயாரித்த மனு இன்று (17) பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மனுவில் முன்னாள் இந்திய அணித் தலைவர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் கபில் தேவ் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், 1992 உலகக் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் அணித் தலைவரான இம்ரான் கானின் உடல்நிலை தொடர்பான அண்மைய தகவல்கள், குறிப்பாக காவலில் இருந்தபோது அவரது பார்வை மோசமடைந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து தீவிர கவலை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் சிறையில் வைக்கப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ராவல்பிண்டி அடியாலா சிறையில் இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, கிரெக் சேப்பல் இந்த மனுவை தயாரித்து உலக கிரிக்கெட் சமூகம் முழுவதிலுமிருந்து ஆதரவை திரட்டியதாக கூறப்படுகிறது.ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.