ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!
அடுத்த சில நாட்களுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பல பகுதிகளில் மழை மற்றும் பனிப்பொழிவு பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில், சீரற்ற வானிலை இன்னொரு வாரத்திற்கு நீடிக்கும் என இங்கிலாந்தின் தேசிய வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது.
இதன்படி, ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மேலும், வடக்கு அயர்லாந்து முழுவதும் தனி எச்சரிக்கை அமுலில் உள்ளது.
அதே நேரம், இங்கிலாந்தில் 198 இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அயர்லாந்து குடியரசில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளதால் பல மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை அமுலில் உள்ளது.மேலும், வடக்கு மற்றும் வடகிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை மாலை நிலவரப்படி, வெள்ளம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்தின் பகுதிகளில் 68 வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன; மேலும், வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள வேல்ஸில் மேலும் 4 வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன