ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி மீது விஷம் கொடுத்து கொ*லை முயற்சி.!
ரஷ்யாவின் முன்னாள் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி சிறையில் உயிரிழந்ததற்கான காரணமாக ‘தவளை விஷம்’ (எபிபாடிடைன்) இருக்கலாம் என பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் ஆதாரங்களை வெளியிட்டுள்ளன. மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பிரிட்டன் வெளிவிவகார செயலர் யவெட் கூப்பர் தெரிவித்ததாவது, நவால்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததில் மிக அரிதான நரம்பு விஷம் கண்டறியப்பட்டதாகும்.
இந்த நச்சு தென்ன அமெரிக்காவின் காடுகளில் வாழும் ஒரு வகை விஷத் தவளைகளில் இருந்து எடுக்கப்படுகிறது, மார்ஃபினை விட 200 மடங்கு அதிக வீரியம் கொண்டது, உடலில் சென்றால் தசைப் பிடிப்பு, பக்கவாதம், சுவாச செயலிழப்பு ஏற்பட்டு விரைவாக மரணம் ஏற்படும். ஐரோப்பிய நாடுகள் வெளியிட்ட அறிக்கையில், இந்த விஷம் ரஷ்யாவில் இயற்கையில் காணப்படாதது, நவால்னி சிறையில் இருந்தபோது இதைச் செலுத்துவதற்கான வாய்ப்பு மற்றும் நோக்கம் ரஷ்ய அரசுக்கு மட்டுமே இருந்தது எனக் கூறப்பட்டுள்ளது.
நவால்னியின் மனைவி யூலியா நவால்னி, கணவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தி, புட்டின் “கொலைகாரர்” எனக் குற்றம் சாட்டி பதில் சொல்லவேண்டும் எனக் கூறியுள்ளார். இதற்கிடையில், ரஷ்யா வழக்கமான முறையில் குற்றச்சாட்டுகளை மறுத்து, மேற்கத்திய நாடுகளின் அறிக்கையை “தகவல் யுத்தம்” மற்றும் நாட்டுப் பிரச்சினைகளை மறைக்க உதவும் பொய் என்ற ரீதியில் விமர்சித்துள்ளது.