பதின்ம வயது சிறுவன் குத்திக் கொ*லை: மூன்று சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு.!
மேற்கு லண்டனில் பதின்ம வயது இளைஞர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் லண்டன் பெருநகர பொலிஸ் அதிகாரிகள், 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.லண்டன் ஹவுன்ஸ்லோ பகுதியைச் சேர்ந்த இச்சிறுவர்களின் பெயர்கள், அவர்களின் வயதை முன்னிட்டு சட்டரீதியாக வெளியிடப்படவில்லை. நேற்றுமுன்தினம் அவர்கள் மீது முறைப்படி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இதன்படி, ஒருவருக்கு கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய இருவருக்கு கடுமையான உடல் சேதம் விளைவிக்க சதி செய்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.மூவரும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.கடந்த மாதம் 12ஆம் தேதி மாலை 5.00 மணியளவில் மேற்கு லண்டன் பெல்தாம் பகுதியில் உள்ள விக்டோரியா சாலையில் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றது.
அதில் காயமடைந்த 18 வயதான மாலிகி சர்மா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது குறித்த மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.