ஒரே இரவில் இருவர் சுட்டுக் கொ*லை; பொலிஸார் தீவிர விசாரணை .!
தென்னிலங்கையின் இருவேறு பகுதிகளில் நேற்று (14) இரவு அரங்கேறிய துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு – ஜிந்துப்பிட்டி மற்றும் களுத்துறை – வஸ்கடுவ ஆகிய இடங்களிலேயே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் உள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றுக்குள் நேற்று இரவு புகுந்த இனந்தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உந்துருளியில் வந்த இருவரில் ஒருவர், கட்டடத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள குறித்த நிலையத்துக்குள் ரி – 56 ரக துப்பாக்கியுடன் நுழைந்து சரமாரியாகச் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், அங்கிருந்த மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாடியமங்கட – வஸ்கடுவ பகுதியில் நேற்று இரவு 7.50 மணியளவில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் 32 வயதுடைய எஸ். புஷ்பகுமார என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.
உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மேற்படி இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உதய குமார மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுனெத் சாந்த ஆகியோரின் ஆலோசனையின் பேரில், களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துஷார டி சில்வா தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு சம்பவங்களும் பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான மோதலா அல்லது தனிப்பட்ட பகையா என்பது குறித்து பொலிஸார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
