ஏக்கிய ராஜ்ய வரைபை நிராகரித்து சமஸ்டி தீர்வை ஒரே குரலில் முன்வைப்பது தொடர்பான கலந்துரையாடல்.!
தமிழர்களது இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அரசு கொண்டுவரவுள்ள ஏக்கிய ராஜ்ய வரைபை நிராகரித்து அதற்குப் பதிலாக கூட்டாட்சி (சமஸ்டி) தீர்வை ஒரே குரலில் முன்வைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தமிழ் தேசிய பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) இளங்கலைஞர் மண்டபத்தில், காலை 10.00 மணிக்கு இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இனப்பிரச்சினைக்கான நிலையான அரசியல் தீர்வாக, தமிழ் மக்கள் தேர்தல்களில் தொடர்ந்து கூட்டாட்சி (சமஸ்டி) தீர்வை வலியுறுத்தி ஆணை வழங்கி வந்துள்ளனர். இருப்பினும், அக்கோரிக்கையினைப் புறக்கணிக்கும் வகையில், கடந்த 2015 – 2019 காலப்பகுதியில் பதவி வகித்த அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட ஏக்கிய ராஜ்ய (ஒற்றையாட்சி அரசு) அரசியல் யாப்பு வரைபை நாட்டிற்கான புதிய அரசியல் யாப்பாக கொண்டு வந்து நிறைவேற்றுவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்தார். அதன் பின்னரும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட நாட்டின் உயர் தலைவர்கள் பல முக்கிய சந்தர்ப்பங்களில் குறித்த அரசியல் யாப்பை நிறைவேற்றும் செயற்பாடுகள் முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர். அதனைச் செயல்படுத்துவதற்கான கலந்துரையாடல்களும் பல கட்டங்களாக இடம்பெற்று வருகின்றன. தமிழர்கள் தேர்தல்களில் வழங்கிய அரசியல் ஆணைக்கு முரணாக கொண்டுவரப்படவுள்ள ஏக்கிய இராஜ்ய யாப்பு வரைபை நிராகரித்து அதற்குப் பதிலாக, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி(சமஸ்டி) அரசியல் யாப்பு உருவாக்கப்படுவதையும் உறுதிப்படுத்தும் நோக்கில், ஸ்ரீலங்கா அரசின் மீது உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டங்களில் அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகியுள்ளது.
இது தொடர்பாக அரசியல் தரப்புகளும், சிவில் சமூக அமைப்புகளும் இணைந்து பொது இணக்கப்பாட்டிற்கு வருதல் அவசியமாகியுள்ளது. இம் முக்கிய முயற்சியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பங்களிப்பு இன்றியமையதது எனக் கருதுகின்றோம்.
எனவே இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு பொது இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு தங்களது ஒத்துழைப்பைக் கோருவதுடன், பெறுமதிமிக்க பங்களிப்பினை வழங்குமாறும். மேலும் தங்களது அமைப்பிலிருந்து இம்முயற்சிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்கக்கூடிய உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
