மட்டக்களப்பில் காட்டுயானை மின்சாரத் தாக்குதலால் உயிரிழப்பு.!
மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.போலிஸாரின் தகவல்படி, திக்கோடை புதிய வீட்டு திட்டப்பகுதிக்கருகில் நேற்று இரவு உணவு தேடி வந்த யானை மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது. விளைநிலங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கியதே இதன் காரணமாகும்.
சம்பவம் தொடர்பாக வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு, மின்சார வேலி அமைக்கப்பட்ட காணியின் உரிமையாளரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அவர் மேலதிக விசாரணைக்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.தற்போது வனவிலங்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பில் வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.அண்மைக்காலமாக போரதீவுப்பற்று மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மனித–யானை மோதல்கள் அதிகரித்து வருவதால், மின்சார வேலிகள் யானைகளின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
