அம்பாறையில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த விசேட சோதனை நடவடிக்கை.!
அம்பாறை மாவட்டம், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை மற்றும் பெரியநீலாவணை பகுதிகளில் அதிகரிக்கும் டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பாரிய விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பல குழுக்களாகப் பிரிந்த அதிகாரிகள் வீடுகள், பாடசாலைகள் மற்றும் பராமரிப்பின்றி காணப்பட்ட வெற்றுக்காணிகளை தீவிரமாகச் சோதனையிட்டனர்.
1851 வீடுகள், 5 பாடசாலைகள், மதஸ்தலங்கள் மற்றும் பொது இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு, 341 இடங்களில் டெங்கு நுளம்பு அதிகமாக காணப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டது.சுகாதார விதிமுறைகளை மீறிய 16 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது, சுற்றுச்சூழல் பாதுகாப்பை அலட்சியப்படுத்திய உரிமையாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சோதனையின் போது நீர் தேங்கியிருந்த டயர்கள், பிளாஸ்டிக் கொள்கலன்கள் அகற்றப்பட்டு, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு டெங்கு அறிகுறிகள் மற்றும் தற்காப்பு முறைகள் குறித்த விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.


