சுகாதார அமைச்சரின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு – அரசாங்க தாதியர்கள் சங்கம் கடும் குற்றச்சாட்டு.!
அரச வைத்தியசாலைகளில் தற்போது சுமார் 20,000 தாதியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக அரசாங்க தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக சுகாதார அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லையென குற்றஞ்சாட்டியுள்ள சங்கம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
பொரல்லவிலுள்ள அரசாங்க தாதியர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று (10.02.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரியா இதனைத் தெரிவித்தார்.தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர், விடுமுறையில் வெளிநாட்டில் தாதியர் தொழிலைத் தொடர அனுமதித்திருந்த வாய்ப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக, ஐந்து ஆண்டுகள் சம்பளமில்லா விடுமுறையில் வெளிநாடு சென்று பொருளாதார சிக்கல்களை சமாளிக்கும் வாய்ப்பை தாதியர்கள் இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
விடுமுறை வாய்ப்பு நீக்கப்பட்டதால், பல தாதியர்கள் சேவையை முழுமையாக கைவிட்டு வெளிநாடு செல்லும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, சுமார் 3,000 அரசு தாதியர்கள் விடுமுறையில் வெளிநாட்டில் பணியாற்றி வருவதாகவும், மேலும் சுமார் 1,500 பேர் அரச சேவையை விட்டு விலகி வெளிநாடு சென்றுள்ளதாகவும் சமன் ரத்னபிரியா தெரிவித்தார்.