ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய மின்சார உலை நிறுவுவதாக அறிவிப்பு.!
அர்சலோர் மிட்டல் நிறுவனம் தனது டங்கெர்க் தொழிற்சாலையில் புதிய மின்சார எஃகு உலை ஒன்றை நிறுவுவதாக ஜனாதிபதி எமாணுவேல் மக்ரோன் முன்னிலையில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த உலை, தொழிற்சாலையில் உள்ள இரு உயர்உலைகளில் ஒன்றை மாற்றி, நிலக்கரியைப் பயன்படுத்தாமல் எஃகு உற்பத்தி செய்வதே நோக்கம்.
இந்த புதிய மின்சார உலை வருடத்திற்கு 20 இலட்சம் டன் எஃகு உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கும். 1.3 பில்லியன் யூரோ முதலீட்டில் அமைக்கப்பட்டு 2029ஆம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. மேலும், பிரான்ஸ் அரசின் ஆற்றல் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தின் கீழ் முதலீட்டின் சுமார் பாதி நிதியளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக சீன எஃகு போட்டி மற்றும் உயர் ஆற்றல் செலவுகள் காரணமாக கார்பன் குறைப்பு திட்டம் தாமதமடைந்தது, இதனால் தொழிற்சாலையின் எதிர்காலம் குறித்து அச்சம் எழுந்தது.
அதனால் இந்த புதிய முதலீடு பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய எஃகு தொழில்துறைக்கு நீண்டகால பாதுகாப்பை வழங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், தொழிற்சங்கங்கள் இந்த திட்டம் போதுமானதல்ல என்றும், 3,200 ஊழியர்களின் எதிர்காலம் குறித்து கவலை காட்டியுள்ளன. தொழிற்சாலையில் செயல்பாடு தொடருமா என்பது குறித்து மேலதிக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.