மட்டக்களப்பில் பெரிய அளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – மூன்று சந்தேகர்கள் கைது.!
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், பரப்பளவில் செயல்பட்டு வந்த ஒரு கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று (10) காலை முற்றுகையிடப்பட்டது.மாவிலங்கத்துறை களப்பை அண்டிய வாவியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 லட்சம் மில்லி லீற்றர் கோடா மற்றும் 50,000 மில்லி லீற்றர் கசிப்புடன் மூன்று சந்தேக நபர்கள், மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இச்சோதனை நேற்று மாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்டது. விசாரணைத் தகவலின் அடிப்படையில், ஆரையம்பதி மற்றும் மாவிலங்கத்துறை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.கைதானவர்களிடமிருந்து கோடா பரல்கள், கசிப்பு வடிப்பதற்கான கலன்கள் மீட்கப்பட்டு, போதைப் பொருட்களுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.காத்தான்குடி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



