சட்டவிரோத கட்டுமான குற்றச்சாட்டு – விளக்கமறியலில் உள்ளோரின் பிணை மனு ஒத்திவைப்பு.!
திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலை நிறுவி, அதனை ஒட்டிய வகையில் சட்டவிரோத கட்டுமானம் மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், நான்கு தேரர்கள் உட்பட 10 எதிராளிகள் திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் பிணை அனுமதி கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிராளிகள் தற்போது திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் புதிய பிணை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.அந்த மனுவை எதிர்வரும் 11ஆம் திகதி புதன்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.மேல் நீதிமன்றத்தில் பிணை மனு தொடர்பான தீர்மானம் வழங்கப்படவுள்ளதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை திருகோணமலை நீதிவான் நீதிமன்றமும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
மேல் நீதிமன்றத்தில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட பிணை மனு தொடர்பாக, வழக்காளி மற்றும் ஏனைய தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்த பின்னர் தீர்மானிக்க வேண்டுமென மேல் நீதிமன்ற நீதிபதி என். எம். எம். அப்துல்லா வழக்கை ஒத்திவைத்தார்.இன்று காலை வழக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிராளிகள் மேல் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மேல் நீதிமன்ற வழக்கின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு நீதிவான் நீதிமன்றமும் தனது நடவடிக்கையை தற்காலிகமாக ஒத்திவைத்தது.பின்னர் மதியம் மீண்டும் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேல் நீதிமன்றம் பிணை மனுவை 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாக மன்றில் அறிவிக்கப்பட்டது.
வழக்கு முடிவடைந்த பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேரர்கள் மற்றும் ஏனைய எதிராளிகள் மீண்டும் விளக்கமறியல்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அந்த வேளையில், நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே கூடியிருந்த சில தேரர்களும் பொதுமக்களும் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.