நாடாளுமன்றத்தில் நாமல் மீது லக்மாலி ஹேமச்சந்திரா கடும் விமர்சனம்.!
ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாமல் ராஜபக்ஷ தன்னை இனத்தையும் மதத்தையும் முன்னிறுத்தும் அரசியல்வாதியாகக் காட்டிக் கொள்ள முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார்.
தெற்கு பகுதியில் மக்களிடையே வாக்கு கேட்டு அவர்களது ஆதரவுடன் நாடாளுமன்றத்துக்கு வரத் துணிவில்லாதவர் இன்று வீர வசனங்கள் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், மக்களின் நலனைக் குறித்து பேசுவதற்கு அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை எனவும், நாட்டை பாதித்த அரசியல் அணியே தற்போது இன அடிப்படையிலான அரசியலை மீண்டும் முன்னிறுத்த முயற்சிக்கின்றது எனவும் லக்மாலி ஹேமச்சந்திரா குற்றஞ்சாட்டினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சிங்களரும் பௌத்தரும் நேர்மையான மக்கள் எனக் குறிப்பிட்டதுடன், தங்களை அந்த அடையாளங்களால் முன்வைக்கும் சில அரசியல்வாதிகள் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன அடிப்படையிலான அரசியலுக்கு இனி இடமில்லை என்றும், அதுபோன்ற அரசியல் முயற்சிகள் இனி வெற்றி பெறாது என்றும் அவர் வலியுறுத்தினார்.