வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு.!
வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, இன்று (06.02.2026) வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.காணி பிணக்குகளை சுமூகமாகத் தீர்ப்பதற்கான நோக்கில், விசேட காணி மத்தியஸ்த சபைகள் உருவாக்கப்பட்டு, வவுனியா மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் அவை செயற்பட்டு வருகின்றன. இதன் கீழ், 2019 முதல் காணி மத்தியஸ்தர்களாகப் பணியாற்றி வந்தவர்களின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிதாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன்படி, கடந்த ஆண்டு இறுதியில் புதிய மத்தியஸ்தர்களுக்கான பயிற்சிகள் மற்றும் பரீட்சைகள் நடத்தப்பட்டதுடன், அவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட விசேட காணி மத்தியஸ்த சபை தவிசாளர், உதவி தவிசாளர் மற்றும் மத்தியஸ்தர்கள் என மொத்தம் 23 பேருக்கு இன்று நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ. சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா. கமலதாசன், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மத்தியஸ்த சபை பயிற்றுவிப்பாளர் செ. விமலராஜா, மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் காண்டீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.


