சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது துப்பாக்கிச் சூடு.!
கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது இன்று (01) நள்ளிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தியை பொலிஸார் சோதனையிட முற்பட்ட போது, பொலிஸாரின் சமிக்ஞையையும் மீறி டிப்பர் வாகனத்தை நிறுத்தாமல் சாரதி அதிவேகமாக பயணித்துள்ளார்.
இதனால், பொலிஸார் பாரவூர்தியை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக, பாரவூர்தியின் எரிபொருள் தாங்கி மற்றும் டயர் என்பன பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
மேலும், டிப்பர் வாகனத்தைச் செலுத்திய சாரதி தப்பி ஓடியுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.