அமெரிக்கா சாராத நாடுகளுடனான ஏற்றுமதியை விரிவுபடுத்த எதிர்பார்ப்பு – கனடா எரிசக்தி அமைச்சர்!
அமெரிக்கா சாராத நாடுகளுடனான ஏற்றுமதியை விரிவுபடுத்த கனடா விரும்புவதாகத் தெரிவித்துள்ள கனடா நாட்டின் எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர் டிம் ஹாட்க்சன், உலகின் மிக முக்கிய எரிசக்தி சந்தைகளில் ஒன்றாக இந்தியா வளர்ச்சியடைந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவின் எரிசக்தி வார நிகழ்வில் விஷேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.கடந்த எட்டு வருட காலப்பகுதியில் முதல் தடவையாக இந்தியா – கனடா எரிசக்தி கலந்துரையாடல் கோவாவில் இடம்பெற்றுள்ளது.
அவர் தொடர்தும் உரையாற்றுகையில், எரிசக்தி தேவை உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகிறது. அதனால் இந்தியாவுடனான எரிசக்தி வர்த்தகத்தை விரிவுபடுத்துவது அவசியம். நாம் ஒரு எரிசக்தி வல்லரசாக மாற வேண்டுமானால், உலகின் மிகப்பெரிய எரிசக்தி சந்தைகளில் ஒன்றான இந்தியாவுடன் எமது எரிசக்தி மற்றும் இயற்கை வளங்கள் வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் வழக்கமான மற்றும் சுத்தமான எரிசக்திக்கான தேவை அடுத்த பத்தாண்டுகளில் சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை விடவும் அதிகமாக இருக்கும்.எரிசக்தி வல்லரசாக மாறுவதற்கான கனடாவின் இலட்சியத்துடன் இணைந்து, இந்திய சந்தையுடன் நாம் ஈடுபட வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். ரொய்ட்டர்ஸ்