பல கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டிருந்த பேழைகள்; சிக்கிய இருவர்.!
மொரட்டுவை மற்றும் பத்தரமுல்லை ஆகிய பகுதிகளில், புதையல் என சந்தேகிக்கப்படும் கருங்கல்லால் செய்யப்பட்ட மூன்று வெவ்வேறு வடிவ பேழைகளை விற்பனை செய்ய முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (26) மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் 41 மற்றும் 53 வயதுடையவர்கள் எனவும், கல்கிசை மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த மூன்று பேழைகளையும் மொரட்டுவையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் வைத்து, 15 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டிருந்த வேளை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பேழைகளுக்குள் அதிக பெறுமதி வாய்ந்த எண்ணெய் போன்ற திரவம் ஒன்று உள்ளதாகவும், அவை பல்வேறு வைத்திய முறைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.