உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கிவுல் ஓயா திட்டம் முழுமையாக கைவிடப்பட வேண்டும் – அநுர அரசை வலியுறுத்துகிறது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

மகாவலி ‘எல்’ வலயத்தை உள்ளடக்கி புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம், தமிழ் மக்களின் காணிகளைப் பறித்து அரச அனுசரணையுடன் தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தையும், வடக்கு – கிழக்கு நிலத் தொடர்பை நிரந்தரமாகப் பிரிக்கும் உள்நோக்கத்தையும் கொண்டதாகும் என, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது.


இந்நாட்டின் பூர்வீக குடிகளான தமிழர்களை, தமது சொந்தப் பிரதேசத்திலேயே இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றும் முயற்சியே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்றும், ஆகவே இந்தத் திட்டம் முழுமையாகக் கைவிடப்பட வேண்டும் என்றும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள விளக்கமான அறிக்கையில், வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவு – மணலாறு பகுதிகளை உள்ளடக்கும் வகையில், 23,456 மில்லியன் ரூபா செலவில் கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்திற்கான அணைக்கட்டு ஒன்றை நிர்மாணிக்க தற்போதைய அநுரகுமார அரசு தீர்மானித்துள்ளதாகவும், அதன் முதல் கட்டமாக 2,500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இந்தத் திட்டம் இவ்வாண்டு ஆரம்பிக்கப்பட்டு, 2031ஆம் ஆண்டு நிறைவு செய்யப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதே திட்டம் 2011ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் மகாவலி ‘டு’ திட்டத்துடன் இணைக்க முயற்சிக்கப்பட்ட போதும் பின்னர் கைவிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான குளங்கள், வயல் நிலங்களை உள்ளடக்கி மணலாறு பிரதேசம் ஏற்கனவே சிங்களமயமாக்கப்பட்டு, அதற்கு ‘வெலிஓயா’ எனப் பெயரிடப்பட்டதுடன், வெளிநாட்டு நிதி பெறும் நோக்கில் அது மகாவலி ‘டு’ வலயம் என அழைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த மகாவலி ‘டு’ வலயத்திற்கு எந்தக் காலத்திலும் மகாவலி நீர் வழங்கப்படமாட்டாது என்பதை, மகாவலி அதிகார சபையின் உயர் அதிகாரிகள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.யுத்தத்திற்குப் பின்னர், கொக்கச்சான்குளம் கிராமம் ‘போகஸ்வெவ’ எனவும், அருகிலுள்ள மற்றொரு கிராமம் ‘நாமல்புர’ எனவும் பெயர் மாற்றப்பட்டு, அம்பாந்தோட்டை, மாத்தளை உள்ளிட்ட சிங்களப் பிரதேசங்களில் இருந்து மக்கள் அழைத்துவரப்பட்டு குடியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.


தற்போது, கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் ஊடாக, தமிழ் மக்கள் விவசாயம் செய்து வரும் 15க்கும் மேற்பட்ட சிறிய குளங்களும், அதனை ஒட்டிய வயல் நிலங்களும், வவுனியா வடக்கிலுள்ள பல பழந்தமிழ் கிராமங்களும், அவற்றின் குளங்கள் மற்றும் வயல் நிலங்களும் நீரில் மூழ்கடிக்கப்படவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஏற்கனவே வாழ்வாதாரங்களை இழந்து போராடும் தமிழ் மக்கள் மீண்டும் தமது நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அரசின் சார்பில் அமைச்சர் சந்திரசேகர், இந்தத் திட்டம் இனவாத நோக்கமற்றது என்றும், தேசிய அபிவிருத்தி, விவசாய வளர்ச்சி மற்றும் நீர்வள முகாமைத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறியிருப்பதை மறுத்துள்ள சுரேஷ் க. பிரேமச்சந்திரன், இது தமிழ் மக்களின் காதுகளில் பூச்சுற்றும் செயல் என கடுமையாக விமர்சித்துள்ளார்.


வடக்கு – கிழக்கில் விவசாய அபிவிருத்தி என்ற பெயரில், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்களால், அந்தப் பிரதேசங்களில் தமிழ் மக்களின் குடிப்பரம்பல் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தமிழர்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தையே இழக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களை மீண்டும் அந்த மண்ணிலிருந்து வெளியேற்றும் இந்த நீர்ப்பாசனத் திட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை வேடிக்கை பார்ப்பவர்களாக இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


உண்மையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த அரசு விரும்பினால், கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தை முற்றுமுழுதாகக் கைவிட வேண்டும் என்றும், ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

37 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

39 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

58 0 0