ஜனாதிபதியால் மட்டும் கல்விச் சீர்திருத்தம் ஒத்திவைக்கப்பட்டது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ..!
கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை எந்தவொரு நிலையிலும் எதிர்க்கட்சி தடுத்து நிறுத்தவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
பாட உள்ளடக்கங்களைத் தயாரித்தல், அவை தொடர்பான தீர்மானங்களை மேற்கொண்ட சந்தர்ப்பங்கள் ஆகியவற்றில் எதிர்க்கட்சியின் எவ்வித பங்களிப்பும் இல்லாத நிலையில், கல்விச் சீர்திருத்தங்கள் ஒத்திவைக்கப்பட்டமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியே காரணம் எனக் கூறப்படுவது அடிப்படையற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கல்விச் சீர்திருத்தங்களை ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவே எடுத்தார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.நேற்று (24) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கல்வித் துறை நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் அச்சந்திப்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுக்க Green Paper, White Paper ஆகியவற்றை முன்வைக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியே முன்மொழிந்ததாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கல்விச் சீர்திருத்தங்களை மீளப்பெறுமாறோ, அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டாம் எனக் கூறியதோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.எதிர்க்கட்சியாக இருந்தாலும், “பிரபஞ்சம்” வேலைத்திட்டத்தின் ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நவீன ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கி, கல்விச் சீர்திருத்தங்களை ஆதரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்கல் மற்றும் தொழில்நுட்ப வசதிகளில் காணப்படும் குறைபாடுகளை கருத்தில் கொண்டு, 2027 ஆம் ஆண்டுக்குள் கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க முடிவெடுத்தது ஜனாதிபதியே எனவும், அதில் எதிர்க்கட்சிக்கு எந்தவிதப் பங்கும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி ஒருபோதும் அதிபர்கள், ஆசிரியர்கள் அல்லது மாணவர்களை வீதிக்கு இறக்கி கல்விச் சீர்திருத்தங்களை எதிர்க்குமாறு அழைப்பு விடுத்ததில்லை என்றும் அவர் கூறினார்.ஜனாதிபதி தனது முகநூல் பதிவில் தரம் 6 இற்கான கல்விச் சீர்திருத்தங்கள் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான பொறுப்பை எதிர்க்கட்சியின்மீது சுமத்துவது தவறானது என்றும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.
தரம் 6 ஆங்கில பாட விடயத் தயாரிப்புப் பணிகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்களோ அல்லது தமது அதிகாரிகள் குழுவோ பங்கேற்கவில்லை என்றும், Buddy Net இணையத்தளத்துடன் தொடர்புடைய பாட அலகு உருவாக்கத்தில் எதிர்க்கட்சி ஈடுபடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பலமுறை மீளாய்வுக்குட்படுத்தப்படும் நிலையில், பொருத்தமற்ற ஒரு இணையத்தள முகவரி பாட நூலில் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் எதிர்க்கட்சிக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்த விடயங்களில் காணப்படும் குறைபாடுகளை மட்டுமே எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியதே தவிர, கல்விச் சீர்திருத்தங்களை நிறுத்துமாறு கோரவில்லை என்றும் அவர் கூறினார்.
கல்விச் சீர்திருத்தங்களை ஒத்திவைத்த பின்னர், அதற்குப் பொறுப்பை எதிர்க்கட்சியின்மீது சுமத்தி சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.மேலும், தரம் 6 இல் இருந்து தகவல் தொழில்நுட்பப் பாடத்தை ஆரம்பிப்பது சரியான நடவடிக்கையல்ல என்றும், கிராமப்புற பாடசாலைகளில் தேவையான வளங்களும் வசதிகளும் இல்லாத நிலையில் இது கல்வியில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

