ஜப்பான் முன்னாள் பிரதமர் கொலை வழக்கின் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.!
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (Shinzo Abe) படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான டெட்சுயா யமகாமிக்கு (Tetsuya Yamagami) ஜப்பானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
45 வயதான டெட்சுயா யமகாமி 2022 ஜூலை மாதம் நாரா (Nara) நகரில் தேர்தல் பிரசார உரையை நிகழ்த்திக்கொண்டிருந்த ஷின்சோ அபேயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.இந்த வழக்கை விசாரித்த நாரா மாவட்ட நீதிமன்றம அரசு தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று யமகாமிக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
ஜப்பானிய சட்டப்படி பொதுவாக ஒரு நபர் கொல்லப்படும் வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை என்பதால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய ‘யுனிஃபிகேஷன் சர்ச்’ (Unification Church) எனும் மத அமைப்பின் மீது கொண்ட வெறுப்பே இந்தக் கொலைக்குக் காரணம் என யமகாமி தெரிவித்தார். குறித்த மத அமைப்புடன் ஷின்சோ அபே நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கருதிய யமகாமி அந்த அமைப்பைப் பலவீனப்படுத்தவும் அதன் தொடர்புகளை அம்பலப்படுத்தவும் அபேயை இலக்கு வைத்ததாகக் குறிப்பிட்டார்.
இந்தக் கொலையைத் தொடர்ந்து ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கும் (LDP) குறித்த மத அமைப்பிற்கும் இடையிலான நீண்டகாலத் தொடர்புகள் வெளிச்சத்திற்கு வந்தன. இதன் விளைவாக அந்த மத அமைப்பின் வரி விலக்கு அந்தஸ்து நீக்கப்பட்டதுடன் அமைப்பைக் கலைக்கவும் உத்தரவிடப்பட்டது.
மேலும் மத அமைப்புகள் பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி நன்கொடைகளைப் பெறுவதைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டமும் ஜப்பானில் கொண்டுவரப்பட்டது.முக்கிய பிரமுகர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.கடுமையான துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டங்களைக் கொண்ட ஜப்பானில் நாட்டின் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவரான ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.