எல் பாசோ தடுப்பு முகாமில் கியூபா அகதி மரணம்.!
அமெரிக்காவின் எல் பாசோவில் (El Paso) உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு அமலாக்கப் பிரிவு (ICE) தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கெரால்டோ லூனாஸ் காம்போஸ் (Geraldo Lunas Campos) என்பவரின் மரணம் ஒரு கொலை (Homicide) என மருத்துவப் பரிசோதகர் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
55 வயதான இந்த கியூபா நாட்டு குடியேற்றவாசி, கடந்த ஜனவரி 03 ஆம் திகதி ‘காம்ப் ஈஸ்ட் மோண்டானா’ (Camp East Montana) தடுப்பு முகாமில் பாதுகாப்பு அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டிருந்த போது நினைவிழந்த நிலையில் காணப்பட்டார். அவசர மருத்துவ உதவியாளர்கள் அவரை மீட்டெடுக்க முயன்ற போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கையில் உயிரிழந்தவரின் மரணத்திற்கு “கழுத்து மற்றும் உடல் நெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல்” (Asphyxia) முக்கிய காரணம் என குறிப்பிடுகிறது. அவரது கழுத்தின் முன்பகுதி மற்றும் பக்கவாட்டிலும், கண் இமைகளிலும் இரத்த நாளங்கள் வெடித்திருப்பதாகவும் (burst blood vessels) கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மரணம் குறித்து கூட்டாட்சி அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கி வருகின்றனர். ஆரம்பத்தில் இது ஒரு மருத்துவ நெருக்கடி எனத் தெரிவித்த அதிகாரிகள், பின்னர் அதனை த*கொலை என விவரித்தனர்.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் வழங்கிய மின்னஞ்சல் அறிக்கையில், காம்போஸ் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும், அவரைக் காப்பாற்ற முயன்ற பாதுகாப்புப் படையினரை அவர் வன்முறையான முறையில் எதிர்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.இருப்பினும், மருத்துவ அறிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.
காம்போஸின் குடும்பத்தினர் அவர் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் குற்றம் சுமத்துகின்றனர். பாதுகாவலர்கள் அவரது கழுத்தை நெரித்துக் கொல்வதைக் கண்டதாக ஒரு சாட்சி கூறியுள்ளதை மேற்கோள் காட்டிய, குடும்பத்தினர் தற்போது ஒரு சட்டப் போராட்டத்திற்குத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த காம்போஸிற்கு மனநலக் குறைபாடு (Bipolar disorder) மற்றும் பதட்டம் (Anxiety) போன்ற பாதிப்புகள் இருந்ததாகவும், அவர் இதற்காகப் பயன்படுத்தும் ‘டிராசோடோன்’ (Trazodone) மற்றும் ‘ஹைட்ராக்ஸிசைன்’ (Hydroxyzine) ஆகிய மருந்துகளை உட்கொண்டிருந்தமை நச்சுயியல் அறிக்கையில் தெரியவந்துள்ளது.இந்தச் சம்பவம் அமெரிக்காவில் உள்ள குடியேற்றவாசிகளின் பாதுகாப்பு மற்றும் தடுப்பு முகாம்களின் தரம் குறித்த பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.