ஒன்பதாவது ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத தகுதிபெற்றுள்ளன. அதன் படி இறுதியாட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி பி.ப 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முதல் அரையிறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி 4வது தடவையாக சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து. ரச்சின் ரவீந்திரா (108) மற்றும் கேன் வில்லியம்சன் (102) ஆகியோரின் அபார சதத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில், நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 362 ஓட்டங்கள் குவித்தது.
363 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 312 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைய நியூசிலாந்து அணி 4வது தடவையாக சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
அதன் படி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி மூன்றாவது சம்பியன்ஸ் பட்டத்தை இலக்கு வைத்தும், நியூசிலாந்து அணி 2000ஆம் ஆண்டு சம்பியன் பட்டம் வென்றதன் பின் இரண்டாவது சம்பியன் பட்டத்தை இலக்குவைத்தும் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன. கடந்த புதன்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இதே இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதியதில் இந்திய அணி வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணி இதுவரையில் தோல்வியுறாத அணியாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.