10 அணிகளுக்கிடையிலான 18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை குஜராத் டைட்டன்ஸ், பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஓப்) தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு பிளே-ஓப் இடத்துக்கு டெல்லி, மும்பை அணிகள் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இரு அணிகளுக்கும் 2 போட்டிகள் எஞ்சி இருக்கின்றன. சென்னை, ராஜஸ்தான், ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.
இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 63 ஆவது லீக் போட்டியில் 5 முறை சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கின்றது.
இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் மும்பை அணி 16 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். மாறாக தோற்றால் அடுத்த போட்டியில் (பஞ்சாப்புக்கு எதிராக) வெற்றி பெறுவதுடன், கடைசிப் போட்டியில் டெல்லி அணி (பஞ்சாப்புக்கு எதிராக) தோல்வியை சந்திக்க வேண்டும்.
டெல்லி அணியை பொறுத்தமட்டில் எஞ்சிய இரு லீக்கிலும் வென்றாக வேண்டும். இன்றைய போட்டியில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விடும். அதன் பிறகு அந்த அணி தனது கடைசி போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தினாலும் 15 புள்ளியைத் தான் தொட முடியும்.
இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.