எமிரேட்ஸ் உயர் அடுக்கு மத்தியர்தர்கள் குழாத்திலுள்ள ஐவர் இறுதிப் போட்டியில் கடமையாற்றவுள்ளனர்.
தென் ஆபிரிக்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஐசிசி டெஸ்ட சம்பியன்ஷப் இறுதிப் போட்டி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி ஆரம்பமாவுள்ளது.
இப் போட்டிக்கு கள மத்தியஸ்தர்களாக நியூஸிலாந்தின் கிறிஸ் கஃபானியும் இங்கிலாந்தின் றிச்சர்ட் இலிங்வேர்த்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொலைக்காட்சி மத்தியஸ்தராக இங்கிலாந்தின் றிச்சர்ட் கெட்ல்பரோவும், நான்காவது மத்தியஸ்தராக இந்தியாவின் நிட்டின் மேனனும் பணியாற்றுவர்.
போட்டி தீர்ப்பாளராக இந்தியாவின் ஜவகல் ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் 2023இல் நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் கள மத்தியஸ்தர்களாக கிறிஸ் கபானி, றிச்சரட் இலிங்வேர்த் ஆகியோர் செயற்பட்டிருந்தனர்.
ஆங்கிலேயரான இலிங்வேர்த், இதற்கு முந்தைய இரண்டு ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளிலும் கள மத்தியஸ்தராக கடமையாற்றி இருந்தார்.
இந்த வருடத்திற்கான இறுதிப் போட்டிக்கும் கள மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ள றிச்சர்ட் இலிங்வேர்த், 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த மத்தியஸ்தருக்கான டேவிட் ஷெப்பர்ட் விருதை வென்றிருந்தார்.