பலவந்த ஜனாஸா எரிப்பு விசாரணைக்குப் விசேட குழு நியமனம்! – அரசிற்கு ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் நன்றி
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்துவதற்காகப் பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்க அங்கீகாரம் வழங்கியுள்ளமைக்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸின் தலைவர் மு.முஸ்னத் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கொவிட்-19 காலத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கடந்த கோட்டாபய அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்துவதற்காகப் பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்கப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் இத்தீர்மானம், இவ்வரசு முஸ்லிம் விரோதப் போக்கைக் கொண்டுள்ளது என முன்வைக்கப்பட்டு வந்த கருத்துக்களை முழுமையாகப் பொய்ப்படுத்தியுள்ளது.
கொவிட் காலம் என்பது இலங்கை முஸ்லிம்களால் மறக்கப்பட முடியாத கொடுமைகளையும் ஓரவஞ்சனைகளையும் கண்ட காலப்பகுதியாகும். சர்வதேச சுகாதார நியமங்களையும் மீறி, சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கைகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணாக இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு பலவந்தமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் பெயர்ப்பட்டியலைக் கூட கோட்டாபய அரசாங்கமோ அல்லது அதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ரணில் அரசாங்கமோ வெளியிடவில்லை. பாராளுமன்றத்திலுள்ள முஸ்லிம் கட்சித் தலைவர்களாலும் கூட இன்றுவரை அப்பட்டியலைப் பெற முடியாத கையறு நிலையிலேயே இருந்து வந்தது.
தற்போதைய அரசாங்கத்தின் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில், பலவந்த ஜனாஸா எரிப்பு விவகாரத்தை விசாரிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும்.
இவ்விசேட குழுவின் உறுப்பினர்கள் விரைவாக நியமிக்கப்பட்டு, எவ்விதப் பாரபட்சமுமின்றி உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன், இத்தகைய பலவந்த எரிப்புக்குப் பின்னணியில் செயற்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தலைவர் மு.முஸ்னத் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.


