அரசை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களே இன்று வீதியில்! : சம்பிக்க கடுமையாகச் சாடல்
இன்று அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் ஆதரவுடனேயே தற்போதைய ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது என்றும், அப்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்பதை மக்கள் தற்போது உணரத் தொடங்கியுள்ளனர் என்றும் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று திங்கட்கிழமை பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டமையை அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டமானது ஜனாதிபதிக்கும் தற்போதைய அரசுக்கும் எதிரான மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் முக்கிய செய்தியாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் மற்றும் பொருளாதார, சமூக ரீதியான எதிர்பார்ப்புகளுக்கும் தற்போதைய வரவு – செலவுத் திட்ட யோசனைகளுக்கும் இடையே பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன என்றும், இதன் காரணமாகவே பல்வேறு தரப்பினரும் அதிருப்தியடைந்து வீதியில் இறங்கும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் தொழிற்சங்கத் தலைவர்களாகச் செயற்பட்டவர்கள், தற்போது மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களையும் கோரிக்கைகளையும் ஒடுக்குவதற்குப் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர் என்றும் சம்பிக்க ரணவக்க கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.
கடந்த கால நிலைப்பாடுகளுக்கு முரணான வகையில் செயற்படும் இத்தகைய போக்கு மக்களின் போராட்ட உரிமைக்கு எதிரானதாக அமைந்துள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.
மக்களின் அபிலாஷைகளையும் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் புறக்கணித்துச் செயற்படும் அணுகுமுறை தொடருமாயின், எதிர்காலத்தில் மக்கள் எதிர்ப்பு மேலும் தீவிரமடையும் என்பதையே நேற்று இடம்பெற்ற போராட்டங்கள் தெளிவாக உணர்த்துகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


