இளம் வயதில் அனுபவித்த வலி நிறைந்த சம்பவம் – மனம் திறந்த ரம்யா கிருஷ்ணன்!
தென்னிந்தியத் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாகத் திகழ்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
தனது ஆரம்பகாலத் திரைப்பயணத்தில் எதிர்கொண்ட விபத்து, பொருளாதார நெருக்கடி மற்றும் அதற்குப் பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த அனுபவங்கள் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், 1987ஆம் ஆண்டு திரைப்படப் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து குறித்து நினைவுகூர்ந்துள்ளார்.
அன்றைய தினம் இரவு முழுவதும் படப்பிடிப்பில் ஈடுபட்ட பின்னர், ஓய்வெடுப்பதற்காக ஒரு அறையிலிருந்து மற்றொரு படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, படிக்கட்டுகள் உண்மையானவை என நினைத்து ஏறியபோது, அவை வெறும் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட போலிப் படிக்கட்டுகள் என்பதை அறியாமல் கீழே விழுந்துள்ளார்.
இதனால் அவரது கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் கணுக்கால் மூட்டில் பாதிப்பு ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை மூலம் மூட்டு இணைக்கப்பட்டதாகவும், இனிமேல் சாதாரணமாகக்கூட நடக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், அந்த விபத்துக்குப் பின்னரும் தனது திரைப்பயணத்தைத் தொடர்ந்த ரம்யா கிருஷ்ணன், 14 வயதில் ஏற்பட்ட அந்த விபத்துக்குப் பின்னரும் பல திரைப்படங்களில் நடனமாடியதாகத் தெரிவித்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற காலப்பகுதியில் தனது குடும்பம் பொருளாதார நெருக்கடியில் இருந்ததாகவும், மருத்துவச் செலவுகளைக்கூடச் சமாளிக்கப் போதிய பணம் இல்லாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் காலப்பகுதியில் நடித்த பல திரைப்படங்கள் தோல்வியடைந்ததுடன், திரைப்பட வாய்ப்புகளும் குறைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் உடனடியாகப் பணம் சம்பாதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டபோது, ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டதுடன், ஐட்டம் பாடல்களுக்கும் நடனமாடியதாகக் கூறியுள்ளார்.
மேலும், தனது திருமணத்திற்கு முந்தைய நாள்கூட திரைப்படப் படப்பிடிப்பில் கலந்துகொண்டதாகவும், அந்தக் காலகட்டத்தில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் உழைத்துப் போராடியதாகவும் ரம்யா கிருஷ்ணன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.


