அவுஸ்ரேலிய அஞ்சல் முத்திரையில் ‘கூத்தாடி’ திரைப்படம் — நடிகர் ஷெல்வின் தாஸின் கலைப்பயணத்தில் வரலாற்றுச் சாதனை!
அவுஸ்ரேலியாவில் வெளியிடப்பட்டுள்ள சிறப்பு அஞ்சல் முத்திரையில், ‘கூத்தாடி’ (Koothadi) திரைப்படத்தின் பெயரும், அதன் தயாரிப்பாளரும் நடிகருமான ஷெல்வின் தாஸ் (Shelvin Das) அவர்களின் உருவமும் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளன.
தமிழ்த் திரையுலகின் கலைப்பயணத்தில் இதுவொரு மிக முக்கியமான சர்வதேச அங்கீகாரமாகக் பார்க்கப்படுகிறது. ஸோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை கவாஸ்கர் காளியப்பன் மிகச்சிறப்பாக எழுதி இயக்கியுள்ளார்.
நவீன நாகரிகத்தின் தாக்கத்தால் கைவிடப்பட்டுவரும் தமிழர்களின் பாரம்பரியத் தெருக்கூத்துக் கலையையும், அக்கலையை நம்பிப் பிழைப்பு நடத்தும் கூத்துக்கலைஞர்களின் நிஜ வாழ்க்கைச் சோகங்களையும், போராட்டங்களையும் மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
வெறும் வணிக சினிமாவுக்காக அல்லாமல், ஈழ மண்ணின் மைந்தர்களின் கலை அர்ப்பணிப்பைச் சொல்லும் ஆழமான படைப்பாக இது விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கலை மற்றும் பண்பாட்டுச் சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் அவுஸ்ரேலியாவில் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சிறப்பு அஞ்சல் முத்திரையில் ‘கூத்தாடி’ படமும் நடிகர் ஷெல்வின் தாஸும் இடம்பெற்றிருப்பது, உலகளாவிய தமிழ்ச் சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒரு தமிழ்த் திரைப்படமும் அதன் கலைஞரும் வெளிநாட்டு அஞ்சல் முத்திரையில் இடம்பெற்று சிறப்பிக்கப்பட்டுள்ளது தமிழ்ச் சினிமா வரலாற்றில் பெருமைமிக்க தருணமாகும்.
இத்திரைப்படம் மற்றும் படக்குழுவினரின் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த இந்தச் சர்வதேச கௌரவம், தமிழ் சினிமாவின் எல்லைகள் விரிவடைந்து வருவதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதுடன், கலைஞர்களின் கண்ணீருக்கும் உழைப்புக்கும் சர்வதேச அளவில் கிடைக்கும் இதுபோன்ற அங்கீகாரங்கள் மேலும் பல தரமான படைப்புகளை உருவாக்குவதற்கான ஊக்கமாக அமைகின்றன எனத் திரையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.





