அவுஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின்னுக்குத் தடை!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் லின், கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஒரு மாதம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
கிறிஸ் லின், இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 பிளாஸ்ட் தொடரில் நார்தாம்ப்டன்ஷயர் அணிக்காக விளையாடினார். அந்த அணி ஜூலை 18 ஆம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை வென்றது. இதையொட்டி நடத்தப்பட்ட வழக்கமான ஊக்கமருந்து சோதனையில் லின்னின் சிறுநீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், கொக்கைன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ஜூலை 31 ஆம் திகதி லின்னுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 20 ஆம் திகதி அவர் அளித்த விளக்கத்தில், ஜூலை 15 ஆம் திகதி இரவு முதல் ஜூலை 16 ஆம் திகதி அதிகாலை வரை கொக்கைன் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டார்.
தான் பயன்படுத்திய கொக்கைன், போட்டிக்கு வெளியே பயன்படுத்தப்பட்டது என்றும், தனது கிரிக்கெட் ஆட்டத்துடன் அதற்கு தொடர்பில்லை என்றும் லின் விளக்கமளித்தார். இதற்கான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்தார். இதனை விசாரித்த ஒழுங்குமுறை அமைப்பு, அவரது விளக்கத்தை ஏற்றுக்கொண்டது.
முதலில் 3 மாதங்கள் தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், லின் போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து மீள்வதற்கான சிகிச்சை திட்டத்தை முடித்ததற்கான ஆதாரத்தை அளித்தார். இதையடுத்து, அவரது தண்டனை காலம் ஒரு மாதமாக குறைக்கப்பட்டது.
இந்தத் தடை ஜூலை 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 30 ஆம் திகதி வரை அமலில் இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடைக்குப் பிறகு கிறிஸ் லின் இதுவரை தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை.


