உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலத்துக்கு ஐ.நா. கடும் எதிர்ப்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
82 பார்வைகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அதனைப் பதிலீடு செய்வதற்காகக் கடந்த காலங்களில் முன்மொழியப்பட்ட ஏனைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களில் காணப்பட்ட பல குறைபாடுகள், அரசால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திலும் உள்வாங்கப்பட்டிருப்பது குறித்துத் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்னர் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி, பரந்துபட்ட மீளாய்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பணிப்புரைக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“அரசால் சமர்ப்பிக்கப்பட்ட முன்னைய வரைவுடன் ஒப்பிடுகையில், தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அதனைப் பதிலீடு செய்வதற்காக முன்னர் முன்மொழியப்பட்ட ஏனைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களில் காணப்பட்ட பல குறைபாடுகள் இந்தச் சட்டமூலத்திலும் உள்ளடங்குவது தீவிர கரிசனைக்குரிய விடயமாகும்.

குறிப்பாக, பயங்கரவாதக் குற்றங்கள் எனும் பதம் பரந்துபட்ட அடிப்படையிலும் போதிய தெளிவின்றியும் வரையறுக்கப்பட்டிருத்தல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் ஏனைய சிவில் நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையிலான மட்டுப்பாடுகள், நிர்வாகத் தடுப்புக்காவல், போதிய நீதித்துறை மேற்பார்வையின்மை, கைது செய்வதற்கும் சோதனைகளை நடத்துவதற்குமான பரந்துபட்ட அதிகாரங்கள், நிறைவேற்று அதிகாரத்தின் வசம் மட்டுமீறிய தன்னிச்சையான அதிகாரங்கள், சித்திரவதைகள் மற்றும் மிக மோசமாக நடத்தப்படுவதிலிருந்து போதிய பாதுகாப்பின்மை, நியாயமான விசாரணைகள் மற்றும் தீர்வுகள் என்பன ஆழமான கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளன.

பயங்கரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் சட்டபூர்வ நியமங்களுக்கு உட்பட்ட விதத்திலும், தெளிவானதும் குறுகியதுமான வகையிலும் வரையறுக்கப்பட வேண்டும். அதேபோன்று, எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுதல், சங்கம் அமைத்தல், மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம், பொது நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான சுதந்திரம் என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் போதிய பாதுகாப்பைக் கொண்டிருக்க வேண்டும். அத்தோடு, எந்தவொரு கட்டுப்பாடும் சட்ட நியமங்களுக்கு உட்பட்டதாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும்.

அதேவேளை, தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தில் நிர்வாகத் தடுப்புக்காவல் தொடர்ந்து முக்கியத்துவம் பெறுவது குறித்து மிகுந்த கவலையடைகின்றோம். சிவில் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையும் உடனடியானதும் முறையானதுமான நீதித்துறைக் கண்காணிப்புக்கும் மீளாய்வுக்கும் உட்படுத்தப்பட வேண்டும்.

அடுத்ததாக, நீதிமன்ற அனுமதியின்றி கைது, சோதனையிடல், பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முப்படையினர் மற்றும் கரையோரக் காவல்படையினருக்குப் பரந்துபட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நீதிமன்ற அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகள் அவசர மற்றும் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் குறுகியகால அடிப்படையில் மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறானதொரு பின்னணியில், இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் இதுபற்றிச் சிவில் சமூக அமைப்புகள், சுயாதீன கட்டமைப்புகள், சட்ட நிபுணர்கள் உள்ளிட்ட பரந்துபட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, மீளாய்வொன்றை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசை ஊக்குவிக்கின்றோம்.

அத்தோடு, பயங்கரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களுக்கான வரையறையைக் குறுகியதாகவும் தெளிவாகவும் வரையறுத்தல், கைது மற்றும் தடுப்புக்காவல் தொடர்பில் சுயாதீன நீதிமன்ற மேற்பார்வையை உறுதி செய்தல், சித்திரவதைகள், முறையற்ற விதத்தில் நடத்தப்படல், வலிந்து காணாமல் ஆக்கப்படல் என்பவற்றுக்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்தல், முறையான சட்ட நடவடிக்கை மற்றும் நியாயமான விசாரணை என்பவற்றுக்கான உத்தரவாதத்தை வலுப்படுத்தல், சோதனையிடல் மற்றும் பறிமுதல் செய்தல் என்பவற்றுக்கு நீதிமன்ற அனுமதியைக் கட்டாயமாக்குதல், சிவில் சேவையில் பொலிஸாரே பிரதானம் என்பதை உறுதிப்படுத்தல் ஆகிய பரிந்துரைகளையும் முன்வைக்கின்றோம்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் அடியோடு ஒடுக்கும் இரு புதிய சட்டமூலங்கள்.!

அரசால் முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம்’ ஆகியன மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் அடியோடு…

0 0 0
இலங்கை செய்திகள்

பொதுநலவாய கபடி சாம்பியன்ஷிப்; யாழ். வீராங்கனை சிறந்த ‘ரைடர்’ விருது வென்று சாதனை.!

இந்தியாவில் நடைபெற்றுவரும் 2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கபடி சம்பியன்ஷிப் தொடரில், இலங்கை தேசிய அணி சார்பாக பங்கேற்றுத் திறமையை வெளிப்படுத்திவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீராங்கனை விமலேந்திரன்…

78 0 0
இலங்கை செய்திகள்

பொலிஸ் காவல் மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.!

“நீதிமன்றங்களில் சட்டரீதியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பொலிஸ் நிலையங்களிலும் சிறைச்சாலைகளுக்குள்ளும் தீர்க்கப்படும் அச்சுறுத்தலான நிலைமை நாட்டில் உருவாகியுள்ளது. பொலிஸ் காவலில் பதிவாகும் மரணங்கள் தொடர்பில் அநுர அரசு…

58 0 0
இலங்கை செய்திகள்

புதிய சட்டமூலம் ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல.!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும், இனிவரும் காலங்களிலும் தவறாகப் பயன்படுத்தப் போவதில்லை என்றும், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும்…

78 0 0