உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாட்டை மாற்ற வேண்டும் என நினைத்தால் முதலில் நமது நடத்தையை மாற்ற வேண்டும் : வடக்கு ஆளுநர் உரை

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
90 பார்வைகள்

நாட்டை மாற்ற வேண்டும் என நினைத்தால், முதலில் நமது நடத்தையை மாற்றுவோம். நாளைய தலைவர்களாகக் காத்திருக்காமல், இன்றைய மாற்றத்துக்கான முன்னுதாரணங்களாக இளைஞர்கள் திகழ வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

‘தூய இலங்கை’ (Clean Sri Lanka) செயற்றிட்டத்தின் கீழ், தீவக வலயக் கல்வி அலுவலகத்தின் பங்களிப்புடன் நடைபெற்ற ‘அடுத்த தலைமுறைத் தலைவர்கள்’ (Next Gen Leaders) தலைமைத்துவப் பயிற்சிச் செயலமர்வு இன்று (21.10.2026) புதன்கிழமை புங்குடுதீவு மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

வீதிகள் சுத்தமாக இருக்க வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும், பாடசாலைகள் சிறந்து விளங்க வேண்டும், அரச அலுவலகங்களில் பணிகள் விரைவாக நடைபெற வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், அந்த மாற்றத்துக்காகத் தமது சிறிய பங்களிப்பை வழங்க வேண்டிய நேரத்தில் பலர் தயங்குகின்றனர். மாற்றத்தை அரசாங்கத்தின் திட்டங்களால் மட்டும் ஏற்படுத்த முடியாது, மக்களும் தமது நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டும் என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

‘தூய இலங்கை’ செயற்றிட்டம் சுற்றாடல் தூய்மையை மட்டுமன்றி, சமூகப் பொறுப்புணர்வு, ஒழுக்கம், நேர்மை மற்றும் பிறரை மதித்தல் ஆகிய பண்புகளையும் அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த மாற்றத்தை உருவாக்குவதில் இளைய தலைமுறையினருக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கல்வியறிவு மட்டுமே ஒருவரைச் சிறந்த தலைவராக்கிவிடாது எனக் குறிப்பிட்ட ஆளுநர், பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு, துணிவுடன் முடிவெடுக்கும் திறன், பிறரது துயரத்தைப் புரிந்துகொள்ளும் இரக்கம் ஆகியவையே உண்மையான தலைமைத்துவத்தின் அடிப்படைகள் என்றார். பிறரது நேரத்தையும் சிரமங்களையும் மதித்தல், தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்ளுதல், பொதுச் சொத்துகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றையும் மாணவர்கள் தமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

‘ஒரு நல்ல தலைவர் எத்தனை பேர் அவருக்குப் பின்னால் வருகின்றனர் என்பதால் மதிப்பிடப்படுவதில்லை; அவரது தலைமைத்துவத்தால் எத்தனை பேரின் வாழ்க்கை மேம்படுகிறது என்பதாலேயே மதிப்பிடப்படுகிறார்’ எனத் தெரிவித்த ஆளுநர், மாணவர்கள் தமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதுடன், வாய்ப்புகள் கிடைக்காத மற்றவர்களுக்கும் உதவ முன்வர வேண்டும் என்றார்.

தலைமைத்துவம் எதிர்காலத்தில் ஒரு பதவியைப் பெறும்போது ஆரம்பிப்பதில்லை. வகுப்பறையில், விளையாட்டு மைதானத்தில், வீட்டில், கிராமத்தில் நாம் நடந்துகொள்ளும் விதத்திலிருந்தே அது ஆரம்பிக்கிறது. எனவே, இச்செயலமர்வில் கற்றுக்கொள்ளும் விடயங்களில் ஒன்றையாவது உடனடியாகத் தமது வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும். நடத்தையில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றமே இந்நிகழ்வின் உண்மையான வெற்றியாக அமையும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாணக் கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன், தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் லெனின் அறிவழகன், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஏழு மாகாணங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

நாட்டின் ஏழு மாகாணங்களில் கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மத்திய, சபரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும்…

83 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாபய ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குவது குறித்து பரிசீலனை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதுவரை சந்தேகநபராகப் பெயரிடப்படாத நிலையில், அவருக்கான வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரிய விடயம்…

72 0 0
இலங்கை செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள பிரதேசங்களுக்கு பலத்த மழை பெய்து வருவதால், அந்த நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம்…

81 0 0
இலங்கை செய்திகள்

பொலிஸ்மா அதிபருக்கு எதிராக வழக்கு

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராகத் வழக்கை தாக்கல் செய்வதற்கான ஆவணத்தை கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசருக்கு அனுப்பி…

86 0 0